புத்ராஜெயா, பிப்ரவரி 10 – ஓரினப்புணர்ச்சி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாக நீதிமன்றத்தில் அன்வாருக்கு தனது தரப்பு வாதங்களை வைக்க சில நிமிடங்கள் அனுமதி வழங்கப்பட்டது.
அப்போது அன்வார் கூறியதாவது:-
“நானும் எனது குடும்பத்தினரும் இறைவனின் துணையுடன் இந்த தண்டனையை ஏற்றுக் கொள்கிறோம். நான் தவறு செய்யாதவன் என்பதை இப்போதும் நிலை நிறுத்துகின்றேன்.”
“தீர்ப்பு கூறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது தற்செயலாக நடந்த ஒன்றாக ஏற்றுக் கொள்ள முடியாது. நீதிமன்றம் எப்போது இருட்டிலேயே இருந்து விடக்கூடாது” என்று அன்வார் தெரிவித்துள்ளார்.
அன்வாரின் பேச்சை தடுத்து நிறுத்திய நீதிபதி ஆரிஃபின், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து மட்டுமே பேச அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசக்கூடாது என்றும் அன்வாருக்கு உத்தரவிட்டார்.
என்றாலும், அன்வார் “நான் என்றும் சரணடையப்போவதில்லை” என்று உரக்க கத்தியவாறு இருந்தார். இதனால் நீதிபதிகள் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர்.