பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 12 – சீன வணிகர்களை புறக்கணிக்க வேண்டும் என அண்மையில் கூறிய கருத்து தொடர்பில் விளக்கமளிக்க வேண்டுமென விவசாய அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரிக்கு (படம்) மத்திய அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது.
இத்தகவலை மசீச தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2ஆம் தேதி சீன வணிகர்களை மலாய்க்காரர்கள் புறக்கணிக்க வேண்டும் என அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு காரணமாக சீன சமுதாயம் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறியுள்ளார்.
“அமைச்சரின் இந்தப் பதிவு சீன சமுதாயத்தினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே விவகாரம் கைமீறிப் போவதற்குள் அமைச்சரவை இதற்கு இயன்ற விரைவில் சுமூக தீர்வு காண வேண்டும்,” என்று லியோவ் தியோங் லாய் (படம்) குறிப்பிட்டுள்ளார்.
இஸ்மாயில் சப்ரி தனது கருத்தை திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மசீசவின் மத்திய செயலவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே தனது சமூக வலைத் தளப் பதிவை இஸ்மாயில் சப்ரி நீக்கியுள்ளார். மேலும் பொருட்களின் விலையைக் குறைக்காத சீன வணிகர்களைக் குறிப்பிட்டு மட்டுமே தாம் கருத்துரைத்ததாக அவர் விளக்கமளித்துள்ளார்.
புதன்கிழமை இரவு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது கருத்து குறித்து விளக்கம் அளிக்குமாறு அமைச்சரவைக் கேட்டுக் கொண்டிருப்பதாகவும், அவ்வாறு விளக்கம் அளிப்பதற்கு முன்னர் மசீச தலைவரை சந்தித்துப் பேச இருப்பதாகவும் அவர் கூறினார்.
“அம்னோ தலைவர்களுக்கும் மசீச தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது தேசிய முன்னணிக்கு நல்லதல்ல என்று பிரதமர் கூறியுள்ளார். எனவே இந்த விவகாரத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அவர் விரும்புகிறார்,” என்றார் இஸ்மாயில் சப்ரி.