Home நாடு மஇகாவில் இருந்து சக்திவேல், ஜஸ்பால், வி.எஸ்.மோகன் நீக்கமா?

மஇகாவில் இருந்து சக்திவேல், ஜஸ்பால், வி.எஸ்.மோகன் நீக்கமா?

760
0
SHARE
Ad

Sakthivel-Sliderகோலாலம்பூர், பிப்.15 – மஇகாவில் இருந்து, 2009ல் தேர்வு பெற்ற மத்திய செயலவையின் உறுப்பினரும், அப்போதைய தலைமைச் செயலாளருமான சக்திவேலை (படம்)  4 மாதங்களுக்கு டத்தோஸ்ரீ பழனிவேல் இடைநீக்கம் செய்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

சக்திவேல் இதற்கு முன்னர் பழனிவேலின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவராக இருந்தார் என்பதும், மஇகாவை பிரதிநிதித்து தேசிய மின்சார வாரியத்தில் (டி.என்.பி) இயக்குநர் பதவிக்கு பழனிவேலுவால் பரிந்துரைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பழனிவேல் விடுத்த அறிக்கையா?

#TamilSchoolmychoice

இது தொடர்பாக பழனிவேல் வெளியிட்டதாக கூறப்படும் அறிக்கை விவரம் வருமாறு:

“திரு.சக்திவேல் என்பவரால் இடைக்கால மத்திய செயலவையின் கூட்டம் கூட்டப்படுவது குறித்து எனது முந்தைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன். இடைக்கால மத்திய செயலவையின் தலைமைச் செயலாளர் என்ற பெயரில் கடந்த 12ஆம் தேதி அந்த இடைக்கால மத்திய செயலவையின் அவசர கூட்டத்திற்கான நோட்டீசை அவர் வெளியிட்டுள்ளார். இந்தக் கூட்டம் 13ஆம் தேதி நடைபெற்றுள்ளது.

palanivel-1“என்னுடைய பல்வேறு எச்சரிக்கைகளையும் மீறி அக்குறிப்பிட்ட கூட்டம் மஇகா தலைமையகத்தின் 3ஆவது தளத்தில் நடைபெற்றுள்ளது. மஇகா அரசியல் சாசனப் பிரிவுகள் 46.5 மற்றும் 49 ஆகியவற்றின் கீழ் கட்சித் தலைவர் என்ற வகையில் எனக்குள்ள அதிகாரங்கள் குறித்து எனது முந்தைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன்.

“தற்போது சக்திவேல் அழகப்பனை மஇகாவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து 4 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்கிறேன். கட்சியின் ஒழுங்குக்குழு தலைவர் கருப்பண்ணனுடன் கலந்தாலோசித்த பிறகே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மஇகாவின் தலைவர் என்ற முறையில் எனக்குள்ள அதிகாரத்தை வலியுறுத்தும் விதமாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

“அடுத்த சில தினங்களில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பை சந்தித்து, மஇகா தலைவர் என்ற வகையில் எனது நிலைப்பாடு குறித்தும், சங்கப் பதிவிலாகாவுடனான சில விவகாரங்கள் குறித்தும் விவரிக்க உள்ளேன். மேலும் மஇகா தலைமைச் செயலாளராக டத்தோ சோதிநாதனை நியமித்த எனது உத்தரவு செல்லும் என்பது குறித்தும், இடைக்கால மத்திய செயலவை என்ற பெயரில் வெளியிடப்படும் அறிவிப்புகள், நடைபெறும் கூட்டங்கள் ஆகியன செல்லுபடியாகாது என்றும் பிரதமரிடம் தெரிவிக்க உள்ளேன்.”

இவ்வாறு தமது அறிக்கையில் பழனிவேல் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஓசை செய்தி உறுதிப்படுத்துகிறது

ஆனால் இந்த அறிக்கை நட்பு ஊடகங்களில் மட்டும் உலா வருகின்றதே தவிர, மஇகாவின் அதிகாரபூர் இணையத் தளத்திலோ,  பழனிவேலுவின் அதிகாரபூர்வ பத்திரிக்கை அறிக்கையாகவோ இதுவரை வெளியிடப்படவில்லை.

அதேசமயத்தில் இன்றைய மக்கள் ஓசை பத்திரிக்கையில் இவர்கள் மூவரின் நீக்கமும் உறுதி என்பது போன்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே மஇகாவில் இருந்து 3 பேர் நீக்கப்பட்டிருக்கும் தகவலை பல தலைவர்களால் உறுதி செய்யவோ, மறுக்கவோ முடியவில்லை.

தலைவர் பதவிக்கான தேர்தலில் பழனிவேலுக்கு ஆதரவு திரட்டும் விதமாக நேற்று மலாக்காவில் நடைபெற்ற தொகுதி தலைவர்கள் கூட்டத்தில், பழனிவேல் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அவர்களில் பெயர் குறிப்பிட விரும்பாத சிலர், சக்திவேல், செனட்டர் டத்தோ ஜஸ்பால் சிங், டத்தோ வி.எஸ்.மோகன் ஆகியோர் மஇகாவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர்.

ஆனால் மஇகா ஒழுங்கு குழுவின் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கருப்பண்ணனை ‘செல்லியல்’ சார்பாக தொடர்பு கொண்டபோது, குறிப்பிட்ட இத்தகவலை தம்மால் உறுதி செய்ய முடியவில்லை என்றார். இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் முன்னர், இத்தகவல் சரியானதுதானா என்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது என்றார் அவர்.

மஇகாவின் புதிய தலைமைச் செயலாளரான டத்தோ சோதிநாதனை தொடர்பு கொண்டபோது, தற்போதைய சூழ்நிலையில் இந்நடவடிக்கை குறித்து தம்மால் கருத்து ஏதும் தெரிவிக்க இயலாது என்றார். மேலும் 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக வெளியான தகவலை உறுதி செய்யவோ மறுக்கவோ தம்மால் இயலவில்லை என்றும் அவர் கூறினார்.

3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பில் மஇகா இணையதளத்திலோ, பழனிவேல் அலுவலகத்தில் இருந்தோ இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.