புதுடெல்லி, பிப்ரவரி 16 – அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா இன்று டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பகல் 12.15 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
இதைத் தொடர்ந்து, இருதரப்பு நல்லறவு, ஒத்துழைப்பு தொடர்பாக இரு நாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் பேச்சுவார்தை பிற்பகலில் நடைபெறவுள்ளது. அப்போது இரு நாடுகள் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இன்று காலை 10 மணிக்கு மகாத்மா காந்தி நினைவிடத்தில் தனது மனைவி ஜெயந்தியுடன் அஞ்சலி செலுத்தினார் சிறீசேனா. பிறகு குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றார். அங்கு அவருக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அமைச்சர்களையும் சிறீசேனா சந்தித்தார். இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா அவரது மனைவி ஜெயந்தியுடன், நான்கு நாள் அரசு முறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்தார்.
இலங்கை அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, சிறீசேனா மேற்கொண்டுள்ள முதலாவது வெளிநாட்டு சுற்றுப்பயணம் இதுவாகும். பிரதமர் மோடியுடனான சந்திப்பினைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு மீண்டும் செல்லும் அதிபர் சிறீசேனா,
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறார். அதன் பிறகு, பிரணாப் முகர்ஜி இரவு 8 மணிக்கு அளிக்கும் அரசு விருந்தில் அவர் பங்கேற்கிறார்.