கோலாலம்பூர், பிப்ரவரி 16 – மஇகா-வின் தேசிய துணைத்தலைவர் வேண்டுமானால் தன்மானத்தை இழந்து கட்சியை மூன்றாம் நபர் வழிநடத்துவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மஇகா தலைவரான நான் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தெரிவித்துள்ளார்.
இன்று மதியம் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் விடுத்த அறிக்கை ஒன்றில், மஇகா பிரச்சனைகள் தீரும் வரை கட்சியை வழிநடத்தும் பொறுப்பை தேசிய முன்னணியின் செயலகம் ஏற்கும் என்று பரிந்துரை ஒன்றை விடுத்தார்.
அதனை உடனடியாக மறுத்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ள மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், தான் அதை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது:-
“என்னால் இன்று பிரதமர் நஜிப் துன் ரசாக்குடனான சந்திப்பில் கலந்து கொள்ள இயலவில்லை. என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக சென்றேன்.இதை பிரதமருக்கு தெரிவித்ததோடு என்னைப் பிரதிநிதித்து டத்தோ சோதிநாதனை அனுப்பி வைத்தேன். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.”
“பிரதமர் நஜிப்பை மஇகா துணைத்தலைவர் எஸ்.சுப்ரமணியம் மற்றும் தெங்கு அட்னான் ஆகியோர் சந்தித்துள்ளனர். கட்சியை தேசிய முன்னணியின் செயலகம் வழிநடத்தும் என்ற தகவல் மட்டுமே சோதிநாதனிடம் பகிரப்பட்டுள்ளது. ”
“மஇகா-வின் தேசிய துணைத்தலைவர் வேண்டுமானால் தன்மானத்தை இழந்து கட்சியை மூன்றாம் நபர் வழிநடத்துவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மஇகா தலைவரான நான் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். கட்சியையும், தேர்தலையும் முறைப்படி வழிநடத்த மஇகாவிற்கென விதிமுறைகளும், சட்டங்களும் உள்ளன. அதை மீறி செய்யப்படும் எந்த ஒரு நடவடிக்கையும் சட்டவிரோதமானது” என்று பழனிவேல் கூறியுள்ளார்.
மேலும், மஇகா-வின் பிரச்சனைகளில் தலையிட சங்கங்களின் பதிவிலாகாவிற்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது என்றும், 1966-ம் ஆண்டு சங்கங்களின் சட்டம் மற்றும் கட்சியின் சட்டத்தின் படி, தேசிய முன்னணிக்கு கட்சியின் நிர்வாகத்தை ஏற்றுநடத்தவோ அல்லது தேர்தலை நடத்துவதற்கோ அதிகாரம் இல்லை என்றும் பழனிவேல் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில், சங்கங்களின் பதிவிலாகா மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு தனது வழக்கறிஞர்கள் குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளதாக பழனிவேல் தெரிவித்துள்ளார்.