கோலாலம்பூர், பிப்ரவரி 16 – மஇகா-வில் தற்போது நிலவி வரும் அத்தனை பிரச்சனைகளுக்கும் பொறுப்பு கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தான் என மஇகா துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.
மஇகா தேர்தலில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கும் பழனிவேல் தான் நேரடியாகவும், மறைமுகமாகவும் காரணம் என்றும் சுப்ரமணியம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மஇகா பிரச்சனைகள் தீரும் வரை கட்சியை தேசிய முன்னணி நிர்வகிக்கும் என்று கூறப்படுவதையும் சுப்ரமணியம் மறுத்துள்ளார்.
இது குறித்து சுப்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “மஇகா-வை தேசிய முன்னணி வழிநடத்தும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படும் தெங்கு அட்னானின் அறிக்கை தவறாக வெளியிடப்பட்ட ஒன்று.”
“கடினமான இந்த சூழ்நிலையிலும் கூட, சுயமரியாதையையும், கட்சியின் கௌரவத்தையும் நாம் விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்பதை மஇகா-வின் தலைவர்களில் ஒருவரான நான், உறுதியாகக் கூறுகின்றேன்.”
“பிரச்சனையுள்ள சில விசயங்களில் மட்டும் தேசிய முன்னணி நடுநிலையாக செயல்பட்டு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே கலந்தாலோசிக்கப்பட்டது.” என்று சுப்ரா தெரிவித்துள்ளார்.
மேலும், “ஆர்ஓஎஸ் அறிவித்துள்ள உத்தரவுகளின் படி மஇகா பிரச்சனைகளைத் தீர்ப்பதோடு, 2009-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவை உறுப்பினர்கள் இடைக்கால மத்திய செயலவையில் செயல்பட்டு மறுதேர்தலை நடத்த வேண்டும் என்று அக்கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது” என்று சுப்ரா கூறியுள்ளார்.
இதற்கு மேலும், பழனிவேல் ஆர்ஓஎஸ் மீது வழக்குத் தொடுப்பதாக அறிவித்துள்ளது இந்த பிரச்சனையை இன்னும் பெரிதுபடுத்துவதோடு, கட்சியை மொத்தமாக செயல்படவிடாமல் செய்துவிடும் என்றும் சுப்ரா தெரிவித்துள்ளார்.