கோலாலம்பூர், பிப்ரவரி 17 – மஇகாவின் நடப்புத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் கட்சியை காவு வாங்கும் வகையில் செயல்படுவதாக மஇகா முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு விமர்சித்துள்ளார்.
பழனிவேல் தனது செயல்பாட்டை மாற்றிக்கொள்ளா விட்டால் இன்னும் அதிகமான சிக்கல்களை எதிர்கொள்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.
“பழனிவேல் தான் மஇகாவின் கடைசி தேசியத் தலைவர் என்று கூறும் வகையில் நிலைமை உள்ளது. மஇகாவின் இத்தனை ஆண்டு கால அரசியலில் இவ்வளவு மோசமான நிலைமை ஏற்பட்டதில்லை. மஇகா தலைவரை சந்திக்க பிரதமர் அழைப்பு விடுக்கிறார். ஆனால் மஇகா தலைவரோ தனது மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்று காரணம் சொல்லி அச்சந்திப்புக்கு போகாமல் இருக்கிறார். தற்போது உள்ள சூழ்நிலையில் கட்சிக்கு இதை விட அவரால் பாதகம் செய்துவிட முடியாது,” என்றார் சாமிவேலு.
உண்மையாகவே பழனிவேல் மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்றால், அவரை கவனிக்க பழனிவேல் ஒன்றும் மருத்துவர் அல்ல என்று சாமிவேலு கூறினார்.
“இதே போன்ற சூழ்நிலையை நான் எதிர்கொண்டிருந்தால் எனது மனைவிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவரை அனுப்பிவிட்டு நான் பிரதமரைச் சந்திக்க சென்றிருப்பேன். இன்று மஇகா விவகாரத்தில் தேசிய முன்னணி தலையிடுவதற்கு பழனிவேலும் அவரது திறமையின்மையுமே காரணம். மஇகா விவகாரங்களை தேசிய முன்னணி செயலகம் கவனிக்கும் என்பது மஇகா வரலாற்றில் இதுவரை ஏற்படாத தர்ம சங்கடமான, வெட்கக்கேடான (embarrassment) நிலை,” என்று சாமிவேலு மேலும் தெரிவித்துள்ளார்.