Home நாடு பழனிவேல் போல் நான் குழப்பத்தில் இல்லை – மொகிதின் யாசின் காட்டம்

பழனிவேல் போல் நான் குழப்பத்தில் இல்லை – மொகிதின் யாசின் காட்டம்

653
0
SHARE
Ad

muhidinகோலாலம்பூர், பிப்ரவரி 17 – மஇகாவில் நிலவி வரும் பிரச்சினைகளைத் தீர்க்க அதில் தலையிட வேண்டியது அவசியமாகிறது என துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.

மஇகா தலைவர்களிடம் இந்தப் பிரச்சினைகளை விட்டால் அவர்களால் நிச்சயமாக தீர்வு காண முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

“இவ்வாறு சொல்ல வருத்தமாக இருந்தாலும் உண்மையில் நான் அப்படித்தான் கருதுகிறேன். மிக மோசமான விளைவுகளை நான் கற்பனை செய்ய விரும்பவில்லை. எனினும் மஇகாவின் பதிவு ரத்தாகிவிடக் கூடாது. சங்கங்களின் பதிவிலாகா மஇகா அரசியல் சாசனத்திற்கு உட்பட்டே செயல்பட்டுள்ளது,” என்றார் மொகிதின் யாசின்.

#TamilSchoolmychoice

பிரதமருடனான சந்திப்பின்போது டத்தோஸ்ரீ பழனிவேலும், டத்தோஸ்ரீ சுப்ரமணியமும் மஇகாவில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தங்களின் கருத்தை கேட்டதாக குறிப்பிட்ட அவர், மறுதேர்தல் நடத்த இருவருமே அப்போது ஒப்புக் கொண்டதாகக் கூறினார்.

“கட்சியில் அனைத்து நிலைகளிலும், குறிப்பாக தலைவர் பதவி முதல் தொகுதிகள் வரை தேர்தலை நடத்த இருவரும் ஒப்புக் கொண்டனர். இப்போது திடீரென அதை மறுப்பதோ, அந்த ஏற்பாடு தொடர்பில் கேள்வி எழுப்புவதோ கூடாது.”

“குறிப்பிட்ட சிலரின் நலன்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல் ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தின் நலன் கருதி மஇகா தலைவர்கள் தங்களது வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டும்,” என்றார் மொகிதின்.

மஇகாவில் தற்போது நிகழும் தலைமைத்துவ போராட்டத்தில் எந்தவொரு தரப்பையும் தாமோ அல்லது பிரதமரோ ஆதரிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், முன்பே ஒப்புக்கொண்ட ஏற்பாட்டிற்கு பழனிவேல் இணங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

“நான் பழனிவேல் போல் அல்லாமல் எனது நோக்கத்தில் தெளிவாக உள்ளேன். மஇகாவில் நிலவும் சிக்கல்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். அக்கட்சி ஒரேடியாக கரைந்து போய்விடக் கூடாது,” என்று மொகிதின் மேலும் தெரிவித்தார்.