கோலாலம்பூர், பிப்ரவரி 17 – தேசியத் தலைவர் தேர்தலில் வாக்குகளைக் கவர சாதி அரசியலைத் தூண்டிவிட வேண்டாம் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேலுக்கு, துணைத்தலைவரான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மஇகாவில் சாதி அரசியல் நிலவுவதை தம்மால் எந்த வகையிலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதை தமது ஆதரவாளர்கள் மத்தியில் அறிவித்த டத்தோ சுப்ரா, நடப்பு தலைவர் பழனிவேல் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக தெரிவித்து சாடினார்.
“எனது பதவிக் காலத்தில் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் உரிய மரியாதையும், அவர்களின் பணி, கல்வித்தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் உரிய பலன்களும் கிடைக்கும் என உறுதியளிக்கிறேன். சாதி அடிப்படையில எவர் ஒருவருக்கும் உயர்வோ சலுகைகளோ கிடைக்காது,” என்றார் டாக்டர் சுப்ரமணியம்.
பழனிவேல் சில தலைவர்களை தனது சொந்த ஆதாயங்களுக்காக சில காலத்திற்கு பயன்படுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், தனது அரசியல் பாணிக்கு ஒத்துவரவில்லை எனத் தெரிந்ததும், பழனிவேல் அவர்களை தூக்கி எறிந்துவிடுவதாக கூறினார்.
அப்போது கூடி இருந்த ஆதரவாளர்கள் மத்தியிலிருந்து, “தேசியத் தலைவர் கடந்த நான்கு ஆண்டுகளில் ஐந்து தலைமைச் செயலாளர்களை மாற்றியுள்ளார்,” எனக் குரல் எழுந்தது.
தொடர்ந்து பேசிய டாக்டர் சுப்ரமணியம், “சகோதரர் குமார் அம்மான் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டு 38 நாட்கள் மட்டுமே பணியாற்றினார். குறிப்பிட்ட சில நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். பிறகு அவரை அகற்றிவிட்டு, டத்தோ சோதிநாதன் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்,” என்றார்.
கட்சி சார்ந்த பல்வேறு முடிவுகள் பழனிவேலின் வீட்டில் வைத்தே எடுக்கப்படுகிறது என்று தாம் கேள்விப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தேசியத் தலைவருக்கு எதிரான நிலைப்பாட்டை தான் எடுக்க அதுவும் முக்கிய காரணம் என்றார்.
“எல்லாவற்றையும் விட கடந்த 2013ல் நடைபெற்ற கட்சித் தேர்தல் முழுமுதற் காரணமாகும். தேர்தல் குறித்து புகார் எழுந்தபோது, சம்பந்தப்பட்டவர்களை அழைத்துப் பேசி கட்சிக்குள் வைத்து, குடும்பமாக பேசி சுமூகத் தீர்வு காண வேண்டுமென நான் ஆலோசனை கூறினேன். ஆனால் மத்திய செயலவை புகார்தாரர்களின் கோரிக்கையை நிராகரித்த பின்னர், அவர்களுக்கு அதிருப்தி இருக்குமானால் சங்கப் பதிவிலாகாவை அணுகலாம் என்று கூறப்பட்டது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் சங்கப் பதிவிலாகாவை அணுக கட்சித் தலைமையே காரணம்,” என்றார் சுப்ரமணியம்.