கர்நாடக, பிப்ரவரி 17 – சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களுக்கு, கர்நாடக உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் 28-வது நாளாக நேற்று திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது. ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் குமார் ஆஜரானார்.
ஜெயலலிதா அளித்த வாக்குமூலத்தை படித்து காண்பித்து அவர், சுதாகரன் திருமணம், தான் பெற்ற சம்பளம், கொடநாடு, ஐதராபாத் கட்டிடங்களின் மதிப்பீடு உள்ளிட்டவை குறித்து ஜெயலலிதா அளித்த வாக்குமூலத்தை மேற்கோள் காட்டினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி குமாரசாமி, வழக்கு விசாரணைக்கு வந்து 28 நாட்களாகியும், 66 கோடி ரூபாய்க்கான சொத்துக்களின் ஆதாரங்களை வழங்காதது ஏன்.
இரண்டு குற்றவாளிகளின் வாதங்கள் முடிந்த பின்னரும், அவற்றை வழங்கவில்லை. ஆவண ஆதாரங்களை வழங்காவிட்டால் நானே தணிக்கையாளரை வைத்து, மதிப்பிட்டு தீர்ப்பு வழங்க நேரிடும்.
ஆதாரங்களை தராமல் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை குறை கூறுவதை ஏற்க முடியாது. சுதாகரன் திருமணச் செலவை கட்சியினர் செய்ததாக கூறுவதை எப்படி ஏற்பது.
நடந்தது ஜெயலலிதா இல்ல திருமணமா? அல்லது கட்சி விழாவா? திருமணச் செலவில் ரூ. 3 கோடி மட்டுமே நீதிபதி குன்ஹா கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளார்.
ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெயலலிதா, ரூ. 66 கோடி சொத்து சேர்த்தது எப்படி? லட்சக்கணக்கான ஆவணங்களும், ஏராளமான சாட்சியங்களும் உள்ள இந்த வழக்கை பொய் வழக்கு என்று எப்படி கூற முடியும் என ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களுக்கு நீதிபதி குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.