கோலாலம்பூர், பிப்ரவரி 19 – பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் டத்தோஸ்ரீ வான் அசிசாவை களமிறக்க பிகேஆர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது காஜாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் வான் அசிசா. இந்நிலையில் அன்வார் இப்ராகிம் சிறைத் தண்டனை பெற்றிருப்பதால் அவரை பெர்மாதாங் பாவ் தொகுதி இடைத்தேர்தலில் களமிறக்குவது குறித்து பிகேஆர் தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரிகிறது.
இது தொடர்பாக அன்வார் இப்ராகிம் அனுமதியை பெறுவது என செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் வான் அசிசா இடைத்தேர்தலில் போட்டியிடுவாரா? என்பதை உறுதி செய்ய பிகேஆர் தலைவர்கள் மறுத்துவிட்டனர்.
“இடைத்தேர்தலில் யாரைக் களமிறக்குவது என இன்னும் முடிவு செய்யவில்லை. எனினும் வேட்பாளர் குறித்து அன்வார் இப்ராகிமுடன் கலந்தாலோசிப்பது என செவ்வாய்க்கிழமை இரவு நடந்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம். இதற்காக ஆர்.சிவராசா விரைவில் சிறைக்குச் சென்று அன்வாரை சந்தித்துப் பேசுவார்,” என்று பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா தெரிவித்தார்.
கடந்த 2013ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில், பெர்மாதாங் பாவ் தொகுதியில் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளரை 15,671 வாக்கு வித்தியாசத்தில் அன்வார் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.