புத்ராஜெயா, பிப்ரவரி 19 – மஇகாவில் நிலவி வரும் நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் விதமாக 2009ஆம் ஆண்டு தேர்வான மத்திய செயலவையின் கூட்டத்தை டத்தோஸ்ரீ பழனிவேல் உடனடியாகக் கூட்டுவார் என தேசிய முன்னணி தலைமைச் செயலர் டத்தோஸ்ரீ துங்கு அட்னான் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உட்கட்சித் தேர்தலை நடத்துவதற்கு சுதந்திரமான தேர்தல் குழு அமைக்கப்படும் என்றார் அவர்.
பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தலைமையில் நடைபெற்ற தேசிய முன்னணியின் உயர்நிலை கூட்டத்தில் பழனிவேல், டாக்டர் சுப்ரமணியம், தேசிய முன்னணி துணைத் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் ஆகியோர் கலந்து கொண்டதாகவும், அக்கூட்டத்தில் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் தானும் பங்கேற்றதாக அவர் குறிப்பிட்டார்.
“மஇகாவில் மறுதேர்தல் நடத்துவது தொடர்பில் இந்த சந்திப்பின்போது ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. சங்கப் பதிவிலாகாவின் பரிந்துரைப்படி மறுதேர்தலை நடத்துவதற்காக 2009ல் தேர்வு பெற்ற மத்திய செயலவையை பயன்படுத்துவது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
“மஇகா கிளைகளுக்கான தேர்தல் ஏப்ரல் மாதத்திலும், தேசியத் தலைவர் தேர்தல் மே மாதத்திலும் நடைபெறும். இதையடுத்து தொகுதிகளுக்கான தேர்தல் ஜூன் மாதத்திலும், பின்னர் துணைத்தலைவர் மற்றும் உதவித் தலைவர், மத்திய செயலவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூலையிலும் நடைபெறும்,” என்றார் துங்கு அட்னான்.
திங்கட்கிழமை அன்று பிரதமருடனான சந்திப்புக்கு பழனிவேல் செல்லவில்லை. இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் அவர் பங்கேற்றது மஇகா விவகாரத்தில் முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது.