Home உலகம் பாதுகாப்பான பணப் பரிமாற்றங்களுக்கு ‘விசா’ புதிய திட்டம்!

பாதுகாப்பான பணப் பரிமாற்றங்களுக்கு ‘விசா’ புதிய திட்டம்!

622
0
SHARE
Ad

VISA

நியூயார்க், பிப்ரவரி 24 – பிரபல பன்னாட்டு நிதி நிறுவனமான ‘விசா’ (VISA) தனது அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு, பாதுகாப்பான பணப்பரிவர்த்தனைகளை ஏற்படுத்திக் கொடுக்க புதிய தொழில்நுட்ப முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த தொழில்நுட்பம் மூலம் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து இருந்து வரும் கடன் அட்டை மோசடி தவிர்க்கப்படும் என விசா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்த புதிய முறையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் தங்கள் திறன்பேசிகளில் விசா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள குறிப்பிட்ட செயலி ஒன்றினை மேம்படுத்த வேண்டும். அவ்வாறு அந்த செயலி மேம்படுத்தப்பட்டவுடன், பயனர்களின் இருப்பிடம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். பயனர் எந்த நாட்டிற்குச் சென்றாலும், அந்த இடம் பற்றிய தகவல்கள் நிறுவனத்தின் தளத்தில் பதிவு செய்யப்படும்.

அங்கு அவர், தனது விசா அட்டைகள் மூலம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைகளும், அந்த செயலி அனுப்பிய தகவல்களுடன் ஒருங்கிணைக்கப்படும். பயனரின் இடமும், பணப் பரிவர்த்தனைகள் செய்யப்படும் இடமும் ஒருங்கமைந்ததாக இல்லை என்றால், அடுத்த பரிவர்த்தனை பயனரின் அனுமதியுடன் நிறுத்தப்படும்.

இது பற்றி விசா நிறுவனத்தின் முக்கிய அதிகாரி மார்க் நெல்சன் கூறுகையில், “எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் உலகின் எந்த மூலையில் பணப்பரிவர்த்தனை செய்தாலும், அதனை பாதுகாப்பானதாகவும், நம்பகத்தன்மையுடையதாகவும் உணரவேண்டும். அதற்கு தற்போது நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் நல்ல பலனை கொடுக்கும் என எதிர்பார்க்கின்றோம்” என்று அவர் கூறியுள்ளார்.

தற்சமயம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த முறை விரைவில் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கும் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பான பணப்பரிவர்த்தனகளை ஏற்படுத்திக் கொடுக்க விசா நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாராட்டுகள் வந்து குவிந்தாலும், வாடிக்கையாளர் பயணிக்கும் இடங்களையெல்லாம் தொடர்ந்து கண்காணிப்பது, அவர்களின் தனிமையை அபகரிப்பதற்கு சமமாகாதா என எதிர்கேள்விகளும் கேட்கப்பட தான் செய்கின்றன.