Home அவசியம் படிக்க வேண்டியவை “முரசு அஞ்சல்: தமிழின் பெருமிதம்” – பிரபல தமிழக பத்திரிக்கையாளர் மாலன்

“முரசு அஞ்சல்: தமிழின் பெருமிதம்” – பிரபல தமிழக பத்திரிக்கையாளர் மாலன்

1249
0
SHARE
Ad

கோலாலம்பூர், பிப்ரவரி 21 – (எதிர்வரும் மார்ச் 14ஆம் தேதி ‘முரசு அஞ்சல்’ 30 ஆண்டு கால விழா, மற்றும் செல்லினம், செல்லியல் செயலிகளின் தொழில் நுட்ப மேம்பாடுகள் அறிமுக விழா என – தமிழ் தொழில்நுட்ப விழாவாக மலரவிருக்கும் ‘இணைமதியம்’ விழாவை முன்னிட்டு, உலகம் எங்கிலும் இருந்து சிறப்புக் கட்டுரைகளை பல பிரமுகர்கள் எழுதி வழங்கி வருகின்றனர். அந்த வரிசையில் இங்கு முதலாவதாக இடம் பெறுவது தமிழகத்தின் பிரபல பத்திரிக்கையாளரும், ‘புதிய தலைமுறை’ வார இதழின் ஆசிரியருமான மாலன் (படம்) அவர்கள் வழங்கியுள்ள இந்த எழுத்துப் படிவம்) 

Maalan“ஒரு நாளைக்குக் குறைந்தது 500 வார்த்தைகளாவது எழுதுவது என் வழக்கம்.அதைத் தவிர மின்னஞ்சல்கள். அத்துடன் என் பணி காரணமாக நாள்தோறும் பல கட்டுரைகளைத் திருத்துகிறேன். ஆவணங்களை உருவாக்குகிறேன்.

தினமும் கணினியில் என் பணிகளைத் தொடங்கும் போது நான் மானசீகமாக நன்றி செலுத்தும் ஒரு நபர் முத்து நெடுமாறன். அது வெறும் அசட்டு உணர்ச்சியினால் (sentiment) அல்ல. அதற்குச் சில காரணங்கள் உண்டு.

#TamilSchoolmychoice

முதல் காரணம் என் தொழிலின் முக்கியக் கருவி தமிழ். அதனைக் கணினியில் எழுத எனக்கு முதன் முதலில் துணை நின்றது முத்துவின் முரசு அஞ்சல். கையால் எழுதுவதைவிட, கணினியில் எழுதுவதால், கணினி கொண்டு திருத்துவதால், கணினி மூலம் பகிர்ந்து கொள்வதால் என்னால் என் பணிகளை விரைவாகவும், விரிவாகவும் செய்ய முடிகிறது. என் பணிகளில் எனக்கு உதவியவருக்கு நான் எப்படி நன்றி சொல்லாமல் இருப்பது?

இரண்டாவது காரணம், தமிழைக் கணினியிலும் கையடக்கக் கருவிகளிலும் நிலைபெறச் செய்தலில் முத்து நெடுமாறனுக்கு முக்கியப் பங்குண்டு. அப்படிச் செய்ததன் காரணமாக இளம் தலைமுறையைத் தமிழின்பால் ஈர்க்க முடிந்தது. தமிழ் என்பது உலகின் தொன்மையான மொழி மாத்திரம் அன்று, உலகின் நவீனமான மொழிகளில் ஒன்றும் கூட என்பது உறுதிப்பட்டது.என் மொழிக்கு உலகளாவிய சிறப்பையும், தலைமுறைகள் தாண்டிய உயிர்ப்பையும் தந்த ஒருவருக்கு நான் நன்றி சொல்லத்தானே வேண்டும்?

Murasu AnjalLogoஎழுத்தார்வம் காரணமாகச் சிலர் ஓய்வு நேரத்தில் கவிதைகள், கதைகள் எழுதுவார்கள். கலைகளில் உள்ள ஆர்வம் காரணமாக சிலர் இசையிலோ, நடிப்பிலோ, ஆர்வம் காட்டுவதுண்டு. முப்பது ஆண்டுகளுக்கு முன், முத்து கணிமையின் மீதுள்ள காதலால் முரசு அஞ்சல் என்ற மென்பொருளை தன்னார்வத்தின் உந்துதலால் ஓய்வுநேரத்தில் உருவாக்கினார். அதை வணிகம் செய்து பொருளீட்டும் நோக்கம் அவருக்கு இல்லை.

இன்று கைபேசிகளில் வருடி வருடி உலகோடு உறவாடிக் கொண்டிருக்கும் தலைமுறை அன்று கணினி உலகம் எப்படி இருந்தது என்பதை அனுபவபூர்வமாக அறிந்திருக்க மாட்டார்கள். அதை விவரித்தால் அது ஏதோ கற்காலம் போலத் தோன்றும்

எண்பதுகளில் கணினிகள டாஸ் என்னும் Disc Operating Systemஐ அடிப்படையாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்தன. அவற்றின் நினைவகங்கள் சிறியவை என்பதால் கணினியில் படிக்கலாம், எழுதலாம். தரவுகளைச் சேமித்துக் கொள்ள வேண்டுமானால் ஒரு ’சின்ன வீடு’ வைத்துக்கொள்ள வேண்டும்.

பிளாஸ்டிக் உறைக்குள் பொதிந்து வைக்கப்பட்ட அந்தக் காந்தத் தாள்களுக்கு ஃபிளாப்பி என்று பெயர். முதலில் அவை அரையடிக்கும் மேற்பட்ட (8 அங்குலம்) சதுரங்களாக இருக்கும். இன்று கட்டைவிரல் நீளத்தில் 64GB அளவிற்குக் கிடைக்கும் ’சேமிப்புக் கிடங்குகள்’, என் அலமாரிகள் இப்போதும் உறங்கிக் கொண்டிருக்கும் அந்தச் சதுரங்களைப் பார்த்து கேலிச் சிரிப்புச் சிரிக்கின்றன.

அந்த நாள்களிலேயே முத்து முரசு அஞ்சலை அறிமுகப்படுத்திவிட்டார். 1985ஆம் ஆண்டு, MS.DOS 3.1 இயங்குதளங்களை ஆதாரமாகக் கொண்டு கணினிகள் செயல்பட்டுக் கொண்டிருந்த நாட்களிலேயே முரசு அஞ்சல் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.

பெண் குழந்தையைப் போல, நாளொரு மேனியும் பொழுதுதொரு வண்ணமுமாக கணினிகள் விரைவாக மாறிக் கொண்டிருந்தன. 90களில் மைக்ரோசாஃப்ட் புதிய சாளரங்களைத் திறந்தது. விண்டோஸ் என்ற அந்த இணையதளம் டாஸைப் போல் இல்லாமல் ’படம் பார்த்துக் கதை சொல்’ என GUI தொழில்நுட்பத்தையும் அதிக அளவிலான நினைவகத்தையும், வேறுபல வசதிகளையும் அளித்ததால். கணினி வல்லுநர்கள் மட்டுமன்றி கணினி ஆர்வலர்களும் கணினியை சில அடிப்படைகளை அறிந்து கொண்டு, ஒரு வானொலிப் பெட்டியை இயக்குவது போல், இயக்கமுடியும் என்ற நிலை ஏற்பட்டது.அதனால் விண்டோஸ் பலத்த வரவேற்பைப் பெற்றது. அறிமுகப்படுத்தப்பட்ட ஆறுமாதங்களில் அந்த மென்பொருள் 20 லட்சம் பிரதிகள் விற்றன.

Maalan 3முத்து கணினியின் இந்த வளர்ச்சியைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார் 1990ல் (மே மாதத்தில் என்று நினைவு) விண்டோஸ் 3 வெளிவந்தது. 1991ல் விண்டோசில் இயங்கக்கூடிய முரசு அஞ்சல் வந்து விட்டது

முத்துவின் பிரமிக்கத் தக்க ஆளுமையே, அவர் மின்னல் வேகத்தில் தனது மென்பொருள்களை update செய்வதுதான்.MS-DOS நாள்களிலிருந்து, இன்று ஆப்பிள் ஐ பேட், ஐ போன்களில் செயல்படும் அவரது தமிழ் மென்பொருள்கள் வரை அவர் சற்றும் சுணங்காமல் செய்து வருகிறார். இதனால் தமிழ் எல்லா நவீனக் கருவிகளிலும் மின்னல் வேகத்தில் நுழைய முடிகிறது. இது தமிழர்கள் ஒவ்வொருவரும் எண்ணியெண்ணிப் பெருமை கொள்ள வேண்டிய ஓர் சாதனை.

நீங்கள் தமிழ்க் கணிமை கடந்து வந்த தடங்களை அறிந்தவராக இருந்தால் இந்தச் சாதனை உங்களைச் சிலிர்க்க வைக்கும். மேம்பட்ட இயங்குதளங்கள், இணையப் பக்கங்கள், இணையம் சார்ந்த மின்னஞ்சல்கள் எனத் தொழில்நுட்பம் மிக விரைவாக, வளர்ந்து கொண்டிருந்த போதிலும், தமிழை அனைவரும் படிக்கும் வண்ணம் உள்ளீடு செய்வது இந்த நூற்றாண்டின் தொடக்கம் வரை ஒரு (கொசுக்கடி)பிரச்சினையாகவே இருந்தது. இன்னொரு புறம், தமிழ் தனித்து இயங்கும் வலிமை கொண்ட மொழி என்பதும், தேவையான கலைச் சொற்களை அது உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல் கொண்டது என்பதும் உண்மை என்றாலும், எல்லோருக்கும் புரியும் வண்ணம் செய்தி சொல்ல சில ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தவும் வேண்டியிருந்தது. குறிப்பாக மின் அஞ்சல்களில்.

முரசு அஞ்சலை ASCIIயை அடித்தளமாகக் கொண்டு வடிவமைத்ததின் காரணமாக ஒரு விசையைப் பயன்படுத்தி ஆங்கிலத்திற்குச் சட்டென்று மாறிக் கொள்ள முடிந்தது.

யூனிகோட் வரவால் எழுத்துருப் பிரச்சினைகள் தீர்ந்தன. யூனிகோடை உற்சாகமாக வரவேற்று அதைக் குறித்த விவாதங்களில் பங்கேற்று உரிய யோசனைகளை அளித்த முத்து, முரசு அஞ்சலில் யூனிகோட் எழுத்துருக்களையும் உருவாக்கினார்.

தேடுபொறிகளில் தமிழில் தேடும் வாய்ப்பை முரசு அஞ்சல் உருவாக்கிய தமிழ் எழுத்துருக்கள் அளித்தன. ஆனால் யூனிகோடில் அமைந்த இணைய தளங்கள் அந்நாளில் அதிகம் இல்லை.

இணையத்தில் யூனிகோடில் அமைந்த தமிழ்த் தரவுகளை அதிகம் ஏற்படுத்தவும் தமிழ் ஓர் உலகமொழி, என்ற உணர்வை ஏற்படுத்தவும் நான் திசைகள் மின்னிதழைத் தொடங்கினேன். அதற்கான எழுத்துருக்களை இலவசமாக அளித்தார் முத்து. சில தொழில்நுட்ப வழிகாட்டுதல்களையும் அளித்தார். அந்த மின்னிதழுக்குத் தன் இணைய தளத்திலும் இடமளித்தார். யூனிகோடைப் பற்றி எளிமையாக எல்லோருக்கும் புரியும் விதத்தில் தமிழுக்கென்று ஒரு சொந்த வீடு என்று கட்டுரைகளும் எழுதினார்.

திசைகள் மூலம் யூனிகோடின் பலன்களை அனுபவபூர்வமாக உணர்ந்த பலர் தங்கள் வலைத் தளங்களை யூனிகோடிற்கு மாற்றிக் கொண்டனர். வலைப்பூக்கள் மலர்ந்தன. வலைப்பூக்களைத் தொகுக்கும் இணையதளங்கள் தோன்றின. எழுதிகள் அறிமுகமாகின. எழுத்துரு மாற்றிகள் உருவாகின. எல்லாவற்றிற்கும் ஆதாரமாக அமைந்தது முத்துவின் கொடைகள்

முரசு அஞ்சலின் முப்பதாண்டுப் பயணம் என்பது ஒரு தனிப்பட்ட நிறுவனத்தின்/ மென்பொருளின் வரலாறு அல்ல. அது தமிழ்க் கணிமையின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்தது.

முரசு அஞ்சல் எனக்கு ஒன்றை எப்போதும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது. தமிழின் தொன்மை குறித்தும் தனித்துவம் குறித்தும் நாம் பெருமை கொள்வதில் தவறில்லை. இன்னும் சொல்லப் போனால் அந்தப் பெருமிதம் நமக்கு கட்டாயம் தேவை. ஆனால் அந்தப் பெருமிதம் நிலைக்க வேண்டுமானால் நாம் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொண்டாக வேண்டும்.

அதை மெய்பித்துக் காட்டியிருக்கும் முரசு அஞ்சல் முத்து நெடுமாறனுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை சேர்க்கும் சின்னம் (Icon)..நாம் மார்பில் சூடி மகிழத்தக்க பதக்கம்

-மாலன்