டாக்கா, பிப்ரவரி 23 – வங்கதேசத்தின் பத்மா ஆற்றில் நேற்று சுமார் 150 பயணிகளுடன் சென்ற படகு, சரக்கு கப்பல்களை இழுத்து செல்லும் இழுவை படகு ஒன்றுடன் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 39 பேர் பலியாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.
வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 44 மைல்கள் மேற்கிலிருக்கும் மாணிக்கஞ்ச் மாவட்டம் பட்டுரியா பகுதியின் அருகே பயணிகள் படகு வந்த போது எதிரே வந்த சரக்கு படகுடன் மோதியது.
இது பற்றி பட்டுரியா பகுதியின் காவல் துறை அதிகாரி பிதன் திரிபுரா கூறுகையில், “இதுவரை 39 பேர் பலியாகி உள்ளனர். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவர்.
விபத்து நடந்த இடத்தில் இதுவரை சுமார் 50-க்கும் மேற்பட்டோரை நாங்கள் பத்திரமாக மீட்டுள்ளோம். மேலும், தீவிர மீட்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றோம்” என்று கூறியுள்ளார்.
வங்கதேசம் மிக விரிவான உள்நாட்டு நீர்வழிகளைக் கொண்டுள்ளது. எனினும், பொருளாதார குறைபாடுகள் காரணமாக அவை மக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை எப்பொழுதும் கொடுப்பதில்லை.
இதோபோன்ற தொடர் படகு விபத்துகளும் அதனால் ஏற்படும் மரணங்களும் அங்கு மிகச் சாதாரணமாக அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.