அகமதாபாத், பிப்ரவரி 23 – பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இன்று மட்டும் பன்றிக் காய்ச்சலுக்கு 10 பேர் உயிரிழந்ததையடுத்து இந்த ஆண்டில் இதுவரை இம்மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 207 ஆக உயர்ந்துள்ளது.
எச்1 என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய், இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது.
குறிப்பாக ராஜஸ்தான், டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் மிக, மிக வேகமாக பரவியுள்ளது. குஜராத் மாநிலத்தில் ஜனவரி முதல் தேதியில் இருந்து நேற்று வரை பன்றிக் காய்ச்சலுக்கு 207 பேர் பலியாகியுள்ளனர்.
இன்று ஒரு நாளில் மட்டும் இந்நோயின் தாக்கத்துக்கு புதிதாக 221 பேர் ஆளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்களுடன் சேர்த்து கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை குஜராத்தில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
பெருகி வரும் பன்றிக் காய்ச்சல் பலிகள் தொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ’உலகளாவிய அளவில் சுமார் 25 ஆயிரம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 10 ஆயிரம் பேர், அதாவது 40 சதவீதம் மக்கள் இந்தியாவில் உள்ளனர்.”
“இதற்கு அரசின் தவறான நிர்வாகமும், பாராமுகமும்தான் காரணம்’ என்று குற்றம்சாட்டியுள்ளார். பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.