கேன்பெர்ரா, பிப்ரவரி 24 – ஆஸ்திரேலியாவில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமாகி வருவதால் அதனை எதிர்கொள்ளும் வகையில் குடியேற்றச் சட்டங்களைக் மிகக் கடுமையானதாக மாற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் நுழைந்த தீவிரவாதி ஒருவன், அங்கிருந்த 13 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தான்.
பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் பிணைக்கைதிகள் மீட்கப்பட்டனர். உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து,
பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்வைத்து டோனி அபோட் தலைமையிலான ஆஸ்திரேலிய அரசு, பல்வேறு புதிய சட்டங்களை வெளியிட்டது.
இதற்கான முழு ஆய்வு அறிக்கை நேற்று ஆஸ்திரேலிய அரசால் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை குறித்து டோனி அபோட் கூறியிருப்பதாவது:-
“சிட்னி தாக்குதலில் ஈடுபட்ட மான் மோனிஸ் என்ற நபர், இரான் நாட்டில் பிறந்து ஆஸ்திரேலியாவில் குடியேறியவர். குற்றப் பின்னணியுடையவராக இருந்தும், மோனிஸ் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடலாம் என்பதை முன்கூட்டியே கண்டறிய முடியாததற்கு தற்போதைய பயங்கரவாதத் தடுப்பு ஏற்பாடுகளில் உள்ள குறைபாடுகளே காரணம்.”
“அவற்றைக் விரைவில் களைய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதில் வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான சட்டங்களை கடுமையாக்குவது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்” என்று அவர் கூறியுள்ளார்.