பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 24 – பாஸ் தலைவர் பதவியில் இருந்து டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கை கவிழ்ப்பது குறித்து அக்கட்சியின் துணைத் தலைவர் முகமட் சாபு திட்டமிடுவதாகக் கூறி, வெளியான ஒலிப்பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இதனால் பாஸ் கட்சி வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.
முன்னதாக அப்துல் ஹாடி அவாங்கை தலைவர் பதவியில் இருந்து அப்புறப்படுத்த பாஸ் தேர்தல் வியூக அமைப்பாளரான டாக்டர் முகமட் ஹட்டா ரம்லி திட்டமிடுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வாட்ஸ் அப்பில் பரிமாறிக் கொள்ளப்பட்ட உரையாடல் தகவல்கள் ஆதாரங்களாக முன்வைக்கப்பட்டன.
அப்துல் ஹாடி அவாங்கை தாக்குமாறு வாட்ஸ் அப் குழு ஒன்றுக்கு டாக்டர் ஹட்டா அனுப்பிய உத்தரவு தொடர்பான வாட்ஸ் அப் திரைக்காட்சிப் பதிவு ஒன்றை கடந்த 8ஆம் தேதியன்று வெளியிட்டார் குவாந்தான் பாஸ் இளைஞர் பிரிவ தலைவர் ஃபட்லி இப்ராகிம்.
டாக்டர் ஹட்டாவைத் தவிர, பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு, உதவித் தலைவர் டத்தோ ஹுசாம் மூசா, பாஸ்மா தலைவர் டத்தோ பஹ்ரோ ஓல்ரசி அகமட் நவாவி உள்ளிட்டோருக்கும் உலாமா தலைமைத்துவத்தையும், கட்சித் தலைவரையும் கவிழ்ப்பதற்கான முயற்சியில் தொடர்புள்ளதாக ஃபட்லி இப்ராகிம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.