கோலாலம்பூர், பிப்ரவரி 25 – கடந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி, கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிக்கு 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானம் பற்றி நேஷனல் ஜியோகிராபிக் தொலைக்காட்சி ஆவணப்படும் ஒன்றின் மூலம் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
காரணம் எம்எச்370 விமானத்தில் விமானிகள் அறையில் இருந்த மர்ம நபர் ஒருவரால், அவ்விமானம் மூன்று முறை திசை திருப்பப்பட்டிருப்பதாகவும், இறுதியாக விமானம் அண்டார்டிகாவுக்கு திருப்பப்பட்டிருக்கலாம் என அத்தகவல் கூறுகின்றது.
இந்த ஆவணப்படம் குறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த ‘தி மிரர்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் எம்.எச்.370 விமானம் 3 முறை தனது பாதையில் இருந்து திசை திருப்பப்பட்டது. 3–வது முறை திசை திருப்பப்பட்ட போது, அது அண்டார்டிகா நோக்கி சென்றிருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, விமான போக்குவரத்து நிபுணர் மால்கம் பிரெனர், விமானிகள் அறையில் இருந்த ஒருவரால் விமானம் வேண்டுமென்றே அண்டார்டிகா நோக்கி இயக்கப்பட்டது. அந்த விமானம் என்ன ஆனது என்பதற்கு விரைவில் விடை கிடைக்கும் என்றார்.
இந்நிலையில், இந்த விமானம் குறித்து வெளியான தகவல்கள் பயணிகளின் உறவினர்கள் மத்தியில் மட்டுமல்லாது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.