கோலாலம்பூர், பிப்ரவரி 25 – ஓரினப்புணர்ச்சி வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எதிர்கட்சித்தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், அரச மன்னிப்பு கோரினால், அது குற்றத்தை ஒப்புக்கொள்வது போல் ஆகிவிடும் என்று பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிஸி ரம்லி கூறியுள்ளார்.
அரச மன்னிப்பு கோருவதற்குத் தேவையான ஆவணங்களை தயாரிக்குமாறு அன்வார் தனக்கு உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்று கூறிய ரஃபிசி, கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுவிசாரணை செய்வதற்கு அவர் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடும் என்று தெரிவித்தார்.
அன்வார் தான் ஒரு நிரபராதி என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். எனவே அவர் அரச மன்னிப்பு கோரமாட்டார் என்று ரபிஸி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
அன்வார் இப்ராகிமுக்கு அரச மன்னிப்பு வழங்கக் கோரும் மனுவை, நேற்று செவ்வாய்க்கிழமை இஸ்தானா நெகாராவில் பிகேஆர் தலைவியும், அன்வாரின் மனைவியுமான டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா, அவரது இரண்டாவது மகள் நூருல் நுகா உள்ளிட்டோர் அளித்துள்ளனர்.