நியூயார்க், பிப்ரவரி 26 – பருவநிலை மாறுதல்களுக்கான அனைத்துலக குழுவின் தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ராஜேந்திர பச்சோரி(74) மீது இளம் பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் வழக்கை தொடர்ந்துள்ளார்.
இதன் காரணமாக அவர் தனது பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்துள்ளார். பருவநிலை மாறுதல் தொடர்பாக ஆராய்ச்சி செய்து வரும் மாணவி ஒருவர் பச்சோரி மீது டெல்லி காவல்துறையினரிடம் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில், கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் பச்சோரியிடம் தான் பணியாற்றி வருவதாகவும், இந்த இரண்டு வருடங்களில் பச்சோரி தனக்கு பலவிதமான பாலியல் துன்புறுத்தல்களை செய்துள்ளதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரின் தொடர் தொல்லைகளால் பொறுமை இழந்து அமைப்பின் மற்ற நிர்வாகிகளிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கைகளும் இல்லை என்றும் அவர் அந்த புகாரில் கூறியுள்ளார்.
இதையடுத்து, பெண்ணின் தன்மானத்திற்கு இழுக்கு ஏற்படும் விதத்தில் நடந்து கொள்ளுதல், பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, மிரட்டுவது உள்ளிட்ட குற்றங்களின் கீழ் பச்சோரி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, தன் மீது கூறப்பட்ட பாலியல் புகார்களை பச்சோரி மறுத்துள்ளார். மேலும் அவர், கைதாவதில் இருந்து தப்பிக்க முன் ஜாமீன் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அனைத்துலக பருவநிலை மாற்ற குழுவின் தலைவர் பதவியில் இருந்து பச்சோரி ராஜினாமா செய்துள்ளதாக ஐநா சபை அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.