புதுடெல்லி, பிப்ரவரி 26 – சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாக நடிகர் சல்மான் கான் மீது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு, மார்ச் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வழக்கின் இறுதி கட்ட விசாரணை கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்குவதாக இருந்தது. இந்நிலையில், தீர்ப்பை ஒத்திவைத்து ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சல்மான் கான் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
1998-ஆம் ஆண்டு படப்பிடிப்பு ஒன்றுக்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு சென்ற சல்மான் கான், வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட விலங்காக அறிவிக்கப்பட்ட, இரு வகை மான்களை வேட்டையாடியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது, உரிமம் காலாவதியான துப்பாக்கியை சல்மான் கான் வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவர் மீது சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பை தற்போது ஜோத்பூர் நீதிமன்றம் மார்ச் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தீர்பளித்தது.