கோலாலம்பூர், பிப்ரவரி 26 – (எதிர்வரும் மார்ச் 14ஆம் தேதி சனிக்கிழமை, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சில் உள்ள நுண்கலைக் கோயில் மண்டபத்தில் மாலை 7.00 மணி முதல், இரவு 9.30 மணி வரை, “இணைமதியம்” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் முரசு அஞ்சல் 30ஆம் ஆண்டு நிறைவு விழா – மற்றும் செல்லினம், செல்லியல் தளங்களின் புதிய தொழில் நுட்ப மேம்பாடுகள் அறிமுகம் காணும் தொழில் நுட்ப விழா – குறித்து மூத்த தமிழ் எழுத்தாளரும், குறிப்பிடத்தக்க முன்னணி மலேசிய இலக்கியப் படைப்பாளர்களில் ஒருவரும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவரும், மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான முனைவர் ரெ.கார்த்திகேசு (படம்) அவர்கள் வழங்கியுள்ள சிறப்புக் கட்டுரை இது)
முரசு கணினி மென்பொருளின் நிறுவனர் முத்தெழிலன் நெடுமாறனை நான் அறிமுகப்படுத்திக்கொண்டு இப்போது கால் நூற்றாண்டு ஆகப்போகிறது.
1987இல் மலாயாப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின்போது கணினியில் தமிழ்ச் செயலி அறிமுகத்தை அவர் செய்தபோது அதைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்து, அதன் மீது ‘காதலாகிக் கண்ணீர் மல்கி’, பின்னர் அவரைப் பிடித்து அதனை என் வசமாக்கிக் கொண்ட கதையை நான் முன்னரே பலமுறை சொல்லியுள்ளேன்.
கணினியில் தமிழ் அறிமுகப்படுத்தப்பட்டது ஒரு பெரும் வரலாற்று நிகழ்வு. முத்துவும் அவர் காலத்திய பிற கணினி ஆர்வலர்களும் தங்கள் சொந்த ஆர்வத்திலும் தங்கள் சொந்தச் செலவிலும் இதனைச் செய்திராவிட்டால் நவீனக் கல்வியுலகில் தமிழ் மொழி தலை நிமிர்ந்து நின்றிருக்க முடியாது. கணினியில் தமிழ் என்பது தமிழ் உலகிற்கு அவர்கள் அருளிய கொடை. கல்வி, புத்தகப் பதிப்பு, இதழியல், இலக்கியம், சமயம் என அனைத்துத் துறைகளிலும் இன்று தமிழ்க் கொடி சுடர் விட்டுப் பறக்க இவர்களே காரணமாகும்.
தமிழ் ஆர்வத்தாலும் சொந்த முயற்சியிலும் தமிழைக் கணினியில் புகுத்துவதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு 1980களில் சாதித்த இந்த இளைஞர்களில் பலர் பிறகாலத்தில் கணினிச் செயலிகளில் பெரும் வல்லுநர்களாகவும் வளர்ந்தார்கள். அவர்களில் முக்கியமானவர் முத்து நெடுமாறன்.
முரசு அஞ்சலின் மிகப் பெரிய சாதனை
முரசு தமிழ் மென்பொருள் மூலமாகவே தமிழ் உலகம் முத்துவை அறிந்தது. ஆனால் முத்து மென்பொருள் துறையில் படைத்துள்ள சாதனை மிகவும் பெரியது. இப்போது கையடக்கக் கணினிகளில் தமிழை உட்செலுத்த அவர் வகுத்துள்ள செயல்முறைகளை Apple நிறுவனமும், தைப்பேயின் HTC நிறுவனமும் அவரிடம் உரிமம் பெற்று, iPhone, iPod, Android முதலியவற்றில் பயன்படுத்துகின்றன.
மலேசியாவின் Celcom, Maxis, Digi ஆகிய நிறுவனங்களுக்கும், அரேபிய எமிரேட் ஒன்றியத்தின் Etisalad நிறுவனத்துக்கும், இந்தியாவின் Airtel, Aircel நிறுவனங்களுக்கும், மால்டிவ்சின் Watania நிறுவனத்துக்கும் அந்நாட்டு மொழிகளில் குறுஞ்செய்திகள் அனுப்பும் சேவைகளை வர்த்தக ரீதியில் அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
2010இல் கைப்பேசிகளில் பயன் படுத்த இந்திய, இந்தோ-சீன மொழிகளில் செயலிகளை உருவாக்கியுள்ளார். அவை தமிழ், தேவநாகரி, வங்காளம், குஜராத்தி, குருமுகி, ஒரியா, தெலுங்கு, மலையாளம், கன்னடம், சிங்களம், லாவ், க்மெர், மயான்மார் ஆகியவையாகும்.
முத்து 2005இல் மலேசிய அரசிடமிருந்து தகவல் தொழில் நுட்ப உன்னத விருதை (ICT Excellence Award) பெற்றுள்ளார். 2008இல் Maxis Innovation விருதினைப் பெற்றார். 2009இல் iPhoneஇல் பயன்படுத்தப்படும் ‘மிக நம்பிக்கையூட்டும்’ (Most promising) செயலிக்கான பரிசினைப் பெற்றார். தமிழகத்தின் சுந்தர ராமசாமி அறக்கட்டளை கணினித்துறைக்கான விருதினை இவருக்கு அளித்திருக்கிறது.
2010இல் ‘செல்லினம்’ எனும் கைப்பேசித் தமிழ்ச் செயலியையும், Lifco-Sellinam என்னும் கைப்பேசித் தமிழ் அகராதியையும் ஆக்கினார். 2013இல் ‘செல்லியல்’ என்னும் கைப்பேசிக்கான ஆங்கில- தமிழ் செய்தித் தளத்தை அறிமுகப் படுத்தியுள்ளார்.
ஆனால் எனக்குச் சொந்த முறையில் முரசு மென்பொருள் அதன் தொடக்க நாள் முதலே என் இலக்கிய முயற்சிகளுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. முரசுவை நான் பயன் படுத்தத் தொடங்கிய பின்னர் என் இலக்கிய உற்பத்தித் திறன் பலமடங்குகள் அதிகரித்துவிட்டது. தமிழ் இலக்கிய உலகில் நான் பெற்றுள்ள பல விருதுகளுக்கும் அடிப்படையான கருவியாக முரசு மென்பொருள் அமைந்தது.
நான் ஆங்கிலத்தில் எழுதப் பலகாலமாக ‘வெர்ட்’ (Word) மென்பொருளைப் பயன் படுத்தி வருகிறேன். வெர்ட் பல புதிய பதிப்புக்களைத்தொடர்ந்து அறிமுகப்படுத்தி வந்திருக்கிறது. முரசு மென்பொருளையும் வெர்ட் தளத்திலேயே பயன்படுத்தி வருகிறேன். ஆகவே வெர்டில் வந்திருக்கின்ற முன்னேற்றங்கள் எல்லாம் முரசு செயலியிலும் வந்திருக்கின்றனவா என்று பார்த்து, அவற்றைப் பற்றி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் முத்துவிடம் பேசியதுண்டு.
முரசிலும் காலப் போக்கில் பல புதுமைகள் செய்யப்பட்டுள்ளன. அகராதி உட்பட பல வசதிகள் அதிலும் வந்துவிட்டன. முயற்சியுள்ளோர் இதனைப் பயன் படுத்திப் பயன் அடைந்திருக்கிறார்கள்.
முரசு மென்பொருள் ஆப்பிள் கணினியில் மிக நன்றாகச் செயல்படுவதாக அனைவரும் கூறுகிறார்கள். ஆனால் நான் ஆப்பிள் கணினி பயன் படுத்துவது இல்லை. மைக்ரோஸோஃப்ட் விண்டோஸ்தான் தொடக்கத்திலிருந்தே நான் பயன்படுத்துவது.
விண்டோஸ் ஒவ்வோரு புதுப்பதிப்புக் காணும்போதும் முரசு கொஞ்சம் பின்தங்கியிருப்பதால், முரசுவைத் தங்கள் கணினியில் பயன்படுத்துவோர் புதிய விண்டோஸுக்கு மாறத் தயங்க வேண்டியுள்ளது. அதே போலத்தான் வெர்ட் புதிய பதிப்புக்களை வாங்கவும் தயங்க வேண்டியுள்ளது. முரசுவின் சில அமசங்கள் அதில் இயங்குவதில்லை.
முரசு மென்பொருளில் உள்ள இன்னும் சில சிறிய குறைகளையும் நான் ஒரு பயநர் என்னும் கோணத்தில் முத்துவிடம் தொடர்ந்து கலந்து பேசி வந்துள்ளேன். முரசுவின் புதிய பதிப்பில் அவற்றில் சில மாற்றம்/முன்னேற்றம் காணும் என முத்து கூறியுள்ளார். அவற்றை நான் ஆர்வமாக எதிர்பார்த்துள்ளேன்.
ஆனால் குறைகள் இருந்தால் என்ன? இப்போது முரசு மென்பொருளைப் பலகாலம் பயன் படுத்தி வந்துவிட்டதால் அதில் உள்ள ‘காதல்’ குறைந்து குறைகள் பெரிதாகத் தெரிகின்றன. ஆனால் உண்மையில் முரசுவின் மூலம் நானடைந்துள்ள நன்மைகளை எண்ணும்போது இவையெல்லாம் ‘பூ’ என்று ஊதித் தள்ளிவிடும் தூசு போன்ற குறைகளே. முரசுவை மேம்படுத்தும் நோக்கில் சொன்னேனே தவிர குற்றம் எனச் சொல்லவில்லை.
கணினித் தொழில்நுட்பம் வளரவளரத் தமிழின் பயன்பாடும் வளரும். அதனை உறுதிப்படுத்தி வரும் முத்தெழிலனுக்கும் அவர்தம் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.