புதுடெல்லி, மார்ச் 2 – காஷ்மீரில் தேர்தல் சுமூகமாக நடைபெற பாகிஸ்தான், ஹூரியத் அமைப்பு மற்றும் தீவிரவாதிகள் அனுமதித்தனர் என பிரதமர் மோடி முன் முதல்வராக பதவி ஏற்றபின், முப்தி முகமது சயீத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள 87 பேரவை தொகுதிகளுக்கு கடந்த டிசம்பரில் தேர்தல் நடந்தது. இதில் முப்தி முகமது சயீத்தின் பிடிபி கட்சி 28 இடங்களிலும், பா.ஜ.க 25 இடங்களிலும், தேசிய மாநாட்டு கட்சி 15 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும் வெற்றி பெற்றன.
யாருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. முரண்பாடுகள் காரணமாக கூட்டணி அமைப்பதிலும் இழுபறி ஏற்பட்டது. இதனால் அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. புதிய கூட்டணி அரசு அமைக்க பாஜவும், பிடிபியும் தொடர்ந்து பலசுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தின.
அதன்படி பாஜ-பிடிபி கூட்டணி அரசு நேற்று பதவியேற்றன. முப்தி முகமது சயீத் (79) 2-வது முறையாக முதல்வராக பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் என்.என். வோரா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
துணை முதல்வராக பாஜவை சேர்ந்த நிர்மல் சிங் பதவியேற்றார். பாஜவைச் சேர்ந்த 11 அமைச்சர்கள் உட்பட மொத்தம் 25 அமைச்சர்கள் பதவியேற்றனர். சுயேச்சையாக வென்ற பிரிவினைவாதத் தலைவர் சஜ்ஜத் லோன், பா.ஜ.க்கான ஒதுக்கீட்டில் அமைச்சராக பதவி ஏற்றார்.
முப்தி முகமது சயீத் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டுவரை காஷ்மீர் முதல்வராக இருந்தார். காஷ்மீரில் கடந்த 49 நாள்களாக இருந்த ஆளுநரின் ஆட்சி இதன் மூலம் முடிவுக்கு வந்தது.
இந்த விழாவில் பிரதமர் மோடி, பாஜ மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பதவி ஏற்றபின் முதல்வர் முப்தி அளித்த பேட்டியில், ‘‘காஷ்மீரில் தேர்தல் சுமூகமாக நடைபெற பாகிஸ்தான், ஹூரியத் அமைப்பு மற்றும் தீவிரவாதிகள் அனுமதித்தனர். காஷ்மீரின் உடனடி தேவை அமைதிக்கான சூழலை உருவாக்குவதுதான்”.
“பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்துவதை தவிர வேறு வழியில்லை. வெளியுறவு துறை செயலரை பாகிஸ்தான் அனுப்புவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்’’ என்றார்.
முப்தியின் இந்த சர்ச்சை பேச்சுக்கு தேசியவாத காங்கிரஸ் உட்பட பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முப்தியின் கருத்துக்கு பதில் அளித்துள்ள பா.ஜ தேசிய செயலர் ஸ்ரீகாந்த் சர்மா,
‘‘காஷ்மீரில் தேர்தல் அமைதியாக நடந்ததற்கு தேர்தல் ஆணையம், இந்திய ராணுவம் மற்றும் மாநிலப் போலீசார் மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களே காரணம்’’ என கூறியுள்ளார்.
காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா டுவிட்டரில் தெரிவித்துள்ள தகவலில், ‘‘உங்கள் முதல்வர் முப்தியின் கருத்தை பார்த்தால், காஷ்மீர் தேர்தலை சுமூகமாக நடத்தியதற்கு பாகிஸ்தான், ஹூரியத் மற்றும் தீவிரவாதிகளுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும் போல் தெரிகிறது”.
“தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதில் தேர்தல் ஆணையம் மற்றும் பாதுகாப்பு படையினரின் பங்கு என்ன என்பதை பிரதமர் மோடி தான் விளக்க வேண்டும்” என கூறியுள்ளார்.