Home இந்தியா சென்னையில் பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு பன்றி காய்ச்சல்!

சென்னையில் பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு பன்றி காய்ச்சல்!

523
0
SHARE
Ad

swine-flu-h1-n1-2சென்னை, மார்ச் 3 – சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3 மாணவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். பன்றிக்காய்ச்சல் நாடு முழுவதும்  வேகமாகப் பரவி வருகிறது.

இந்நோய்க்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 வட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்திலும் இந்த நோய் வேகமாகப் பரவி வருகிறது.

பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 12 பேர் பலியாகி இருக்கும் நிலையில், 300-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்டை மாநிலமான ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பன்றிக்காய்ச்சல் நோயின் பாதிப்பு, அதிகமாகக் காணப்படுகிறது.

#TamilSchoolmychoice

இதனால் எல்லையோர பகுதிகளில் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழகம் முழுவதும், பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்தவும், நோய் வராமல் தடுக்கவும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

சென்னையில் உள்ள பள்ளிகளில் காலை நேரத்தில் மாணவ, மாணவிகளுக்கு பன்றிக்காய்ச்சல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. லேசான காய்ச்சல் ஏற்பட்டாலே பள்ளிக்கு வரக்கூடாது என்றும், விடுமுறை எடுத்துவிட்டு வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

swine fluதேர்வு நடைபெறும் நேரங்களில் மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டாலும் கட்டாயப்படுத்தி அவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் காய்ச்சலால் தேர்வு எழுத முடியாமல் போகும் மாணவர்களுக்கு வேறு நாளில் தனியாக தேர்வுகள் நடத்தப்படும் என்றும் பள்ளி நிர்வாகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்போது 3 மாணவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் நோய் அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அந்த பள்ளிக்கு குறைவான மாணவர்களே வந்திருந்தனர். பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. மேலும், அப்பகுதியில் பெற்றோர் உள்ளிட்ட பொது மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.