பெட்டாலிங் ஜெயா, மார்ச் 4 – எம்எச்370 தேடுதல் நடவடிக்கையை கைவிடும் திட்டம் ஏதும் இல்லை என ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் வாரன் டிரஸ் அறிவித்துள்ளார்.
தேடுதல் நடவடிக்கையை கைவிடுவது தொடர்பாக சீனா மற்றும் மலேசியாவுடன் கலந்தாலோசிக்கப்படுகிறது என்று தாம் அறிவித்ததாக ஏற்கெனவே வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.
“சீனாவுடனும் மலேசியாவுடனும் கலந்தாலோசனை நடப்பது உண்மைதான். ஆனால் அது தற்போது நடைபெற்று வரும் தேடுதல் நடவடிக்கை தொடர்பானது. அந்நடவடிக்கையை கைவிடுவது தொடர்பானது அல்ல,” என்று துணைப் பிரதமரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
60 ஆயிரம் சதுர கிலோமீட்டர் கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் தேடுதல் நடவடிக்கையில் சுமார் 40 விழுக்காடு பணி முடிவடைந்திருப்பதாக குறிப்பிட்ட அவர், மே மாதம் வரை இந்நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றார்.
“இந்த ஆண்டு மே மாதத்திற்குள் விமானம் கிடைக்கவில்லை என்றால் மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும். எனினும் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும். தேடுதல் நடவடிக்கையை கைவிடுவது குறித்து தற்போது விவாதிக்கவில்லை,” என்றார் அந்த செய்தித் தொடர்பாளர்.
தேடுதல் நடவடிக்கை என்றென்றும் நீடிக்க முடியாது என்று வாரன் டிரஸ் கூறியதாக திங்கட்கிழமை ராய்ட்டர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.
இன்னும் சில வாரங்களில் தேடுதல் நடவடிக்கையை நிறுத்துவது குறித்து சீனா மற்றும் மலேசியாவுடன் விவாதிக்கப்படுகிறது என்று வாரன் கூறியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.