கோலாலம்பூர், மார்ச் 3 – தேர்தல் குளறுபடிகள், ஆர்ஓஎஸ் விவகாரம் என மஇகா இரண்டு அணிகளாகப் பிரிந்து இருந்தாலும், விரைவில் நடத்தப்படவிருக்கும் மறுதேர்தலில் தேர்தல் குழுவிற்கு யார் தலைமை ஏற்பது என்பதில் மட்டும், ஆச்சர்யமளிக்கும் வகையில் இரு அணிகளும் ஓர் இணக்கத்திற்கு வந்துள்ளன.
அந்த வகையில், மஇகா-வில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவரும், மூத்த வழக்கறிஞருமான டி.பி.விஜேந்திரன்தான் தேர்தல் குழுவை வழிநடத்தத் தகுதியானவர் என்பதை இரு அணிகளும் ஏற்றுக் கொண்டுள்ளதாக மஇகா வட்டாரங்கள் கூறுகின்றன.
“கடந்த 1989-ம் ஆண்டு அப்போதைய மஇகா தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலுவும், அப்போதைய துணைத்தலைவர் சுப்ரமணியமும் தலைமைத்துவ பதவிக்கு தேர்தலில் போட்டியிட்ட சமயத்தில், கட்சியின் தலைமைச் செயலாளராக விஜேந்திரன் பதவி வகித்தார். எனவே அவரது அனுபவம் தற்போது பழனிவேலுக்கும், டாக்டர் சுப்ரமணியத்திற்கும் இடையே நடக்கவுள்ள தலைமைத்துவ பதவிக்கான தேர்தல் போட்டியை வழிநடத்த உதவியாகவும், பயனாகவும் இருக்கும். மேலும், கட்சியில் பெரும்பாலான சட்டத் திருத்தங்களை செய்தவரும் விஜேந்திரன் தான் என்பதோடு, சட்டவிதிகள் குறித்து நன்கு அறிந்தவர். சட்டரீதியான பின்புலமும், அது தொடர்பான அறிவையும் கொண்டிருக்கும் அவர் வழக்கறிஞர்களிடையே மிகவும் மரியாதைக்குரியவர். இரு அணிகளையும் தனது கட்டுப்பாட்டில் வைக்கும் தகுதியும், ஆளுமையும் கொண்டவர். இன்றைய சூழ்நிலையில், தேர்தல் குழுத் தலைவராக செயல்பட்டு மறுதேர்தலை சிறப்பாக வழிநடத்த கட்சியில் விஜேந்திரனுக்கு இணையாக வேறு ஒருவர் இல்லை” என்று மஇகா தொகுதித் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு விஜேந்திரனிடம் இரு அணிகள் சார்பிலும் கேட்டுக்கொண்ட போதும், அவர் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை என்றும் மஇகா வட்டாரங்கள் கூறுகின்றன.
தேர்தல் குழு தலைவராகப் பொறுப்பேற்றால், தலைவர் மற்றும் இதர தேர்தல்களில், தான் எடுக்கும் முடிவுகள் காரணமாக, இரு அணிகளிலும் உள்ள தனது நண்பர்களின் வெறுப்புகளை பெறக் கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதாலேயே விஜேந்திரன் தேர்தல் குழுவின் தலைமைப் பொறுப்பு ஏற்க தயக்கம் காட்டுவதாக அவருக்கு மிக நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
முன்னாள் செனட்டரான விஜேந்திரன், காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் ஆகிய பதவிகளை வகித்தவர். கட்சியின் உதவித் தலைவராகவும் பதவி வகித்தவர்.
மக்களின் நன்மதிப்பினைப் பெற்ற ஒருவர் தான் மஇகா மறுதேர்தல்களை நடத்த வேண்டும் என்றும், 2013-ம் ஆண்டு தேர்தல் முறைகேடுகளில் எழுந்த குற்றச்சாட்டுக்களைப் போல் தேர்தல் நடத்துபவரின் நேர்மை கேள்விக்குறியாக்கப்பட்டு விடக்கூடாது என்றும் மஇகா வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அப்படியே புகார்கள் ஏற்பட்டாலும், தேர்தல் குழுத் தலைவர் அதை தனது பொறுப்பில் எடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சரியான மொழியில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் மஇகா வட்டாரங்கள் கூறுகின்றன.
“விஜேந்திரன், மஇகா கிளைகள் மற்றும் தொகுதிகள் ஆகியவற்றின் அமைப்பு முறைகளை நன்கு அனுபவபூர்வமாக அறிந்தவர் என்பது அவரின் கூடுதல் சிறப்பு. 26 வருடங்களுக்குப் பிறகு மஇகா-வில் தலைமைத்துவ தேர்தல் நடைபெறவுள்ளது. கிளைத் தலைவர்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்கும் புதிய சட்ட திருத்தத்தின் கீழ் இந்த தேர்தல் முதன் முறையாக நடைபெறவுள்ளது. எனவே கட்சி நிர்வாகம் அனைத்தையும் அறிந்த, தலைமைத்துவ தேர்தலின் வாக்களிப்பு முறைகளையும் நன்கு அறிந்தவரால் மட்டுமே எந்த ஒரு பிரச்சனையும் இன்றி தேர்தலை சுமுகமாக நடத்த முடியும். எனவே விஜேந்திரனைத் தவிர வேறு ஒருவரை அந்த பொறுப்பிற்கு எண்ணிப் பார்க்க இயலவில்லை” என்று விஜேந்திரனுக்கு அரசியலில் நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.
1990ஆம் ஆண்டுகளில் மஇகா-வில் சட்டத்திருத்தங்கள் செய்யும் குழுவிற்கு தலைமையேற்று, விஜேந்திரன் தலைமையில் மஇகா சட்ட அமைப்பு விதிகளில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திருத்தங்கள்தான் இப்போதும் நடைமுறையில் இருக்கின்றன.
மஇகா-வில் விஜேந்திரன் வகித்த பல்வேறு பதவிகள் காரணமாக அரசியல் வட்டாரங்களில் அவர் மிக முக்கியத்துவம் வாய்ந்தவராக ஒரு காலகட்டத்தில் விளங்கினார். தற்போது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மஇகா தேர்தலை நடத்தும் மிகப் பெரிய பொறுப்பை ஏற்று, கட்சியை சரியான பாதைக்கு கொண்டு சென்று தனது பங்களிப்பை செய்ய வேண்டிய நேரம் அவருக்கு வந்துவிட்டது.
“தேர்தல் குழுத் தலைவர் பதவியை ஏற்க தயக்கம் காட்டுவதற்கு விஜேந்திரனுக்கு சில தனிப்பட்ட, நியாயமான காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவரது தனிப்பட்ட பிரச்சனைகளை புறம் தள்ளிவிட்டு, எந்த ஒரு பயமும், பாரபட்சமும் இன்றி செயல்பட்டு கட்சியை மீண்டும் அதன் பழைய நிலைக்கு கொண்டு வரக் கூடிய வரலாற்று சிறப்பு வாய்ந்த நேரம் வந்துவிட்டது. கட்சி மேலும் மேலும் தனது பிரச்சனைகளில் மூழ்காமல் அதைக் காப்பாற்றி, தேர்தலை சரியான முறையில் நடத்த விஜேந்திரனுக்கு எல்லாத் தகுதியும் உள்ளது. சுதந்திரமாகவும், எந்தவித தலையீடும் இன்றி நடுநிலையோடு அவர் தேர்தலை நடத்த அவருக்கு முழு சுதந்திரம் வழங்குவதற்கு இருதரப்பும் முன்வருமானால், தேர்தல் குழுத் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள அவர் முன்வரலாம்” என்று சட்டத்துறையில் விஜேந்திரனின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கும் ஒரு நண்பர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கருத்துக்களைப் பெற விஜேந்திரனைத் தொடர்பு கொள்ள இயலவில்லை.
-இரா.முத்தரசன்