பெர்த், மார்ச் 4 – எப்படி என்னையும் அனுஷ்காவையும் பற்றி அப்படி எழுதலாம் என்று, இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் விராட் கோலி, இந்திய பத்திரிகையாளர் ஒருவரிடம் சண்டை போட்டு கலாட்டா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வரும் 6-ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோத உள்ளது. இதற்காக பெர்த் நகரில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. வலைப் பயிற்சியை முடித்துவிட்டு தனது அறைக்கு கோலி திரும்பிக் கொண்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவம்தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கோலி நடந்து சென்ற போது, இந்தியாவை சேர்ந்த ஆங்கில பத்திரிகையின் நிருபர் ஒருவர் அந்த வழியில் நின்றுள்ளார். அவரை பார்த்ததும், வாய்க்கு வந்தபடி திட்ட ஆரம்பித்தாராம், கோலி. இதனால் அந்த பத்திரிகையாளர் மட்டுமின்றி, சக வீரர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திடீரென தன்னை மோசமாக திட்டியதற்கான காரணம் தெரியாமல் அதிர்ச்சியில் நின்றுள்ளார் அந்த பத்திரிகையாளர். இதன் பிறகு சக வீரர்கள் சிலர், கோலியிடம் பேச்சுக் கொடுத்து, அந்த பத்திரிகையாளரை ஏன் திட்டினீர்கள் என்று கேட்டுள்ளனர்.
தன்னையும், தன் காதலி அனுஷ்கா சர்மாவையும் பற்றி சர்ச்சைக்குறிய ஒரு கட்டுரை அந்த பத்திரிகையில் வந்திருந்தது. எனவே தான் திட்டினேன் என்று கூறியுள்ளார் கோலி.
ஆனால் அதன்பிறகுதான் தெரிந்துள்ளது, அந்த பத்திரிகையில் வந்த கட்டுரையை எழுதியது வேறு ஒரு நிருபர் என்பது. தனது தவறை உணர்ந்த கோலி, பத்திரிகையாளரை சந்தித்து மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இதனிடையே சம்பவம் குறித்து அறிந்த அணி மேலாளர் ரவி சாஸ்திரி, கோலியை சந்தித்து, அவரது கோபத்தை குறைத்துக் கொள்ளுமாறு அறிவுரை கூறியுள்ளார். அடுத்த கேப்டனாக உருமாற வேண்டிய நேரத்தில், இப்படி கோபப்பட்ட வேண்டாம் என்று ரவி சாஸ்திரி அறிவுரை கூறியுள்ளார்.