சென்னை, மார்ச் 4 – திரையரங்குகளுடன் கூடிய வணிக வளாகமாக சாந்தி திரையரங்கம் மாற்றப்படுகிறது. இதற்காக தனியார் கட்டுமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று நடிகர் பிரபு தெரிவித்தார்.
சாந்தி திரையரங்கம் கடந்த 1961-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த திரையரங்கத்தை தற்போது ‘அக்ஷயா’ நிறுவனத்துடன் இணைந்து திரையரங்கத்துடன் கூடிய பொழுதுபோக்கு வணிக வளாகமாக புதுப்பிக்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள், சிவாஜி குடும்பத்தினர்.
இதுகுறித்து சிவாஜி கணேசன் மகன்கள் ராம் குமார், பிரபு, பேரன்கள் துஷ்யந்த், விக்ரம் பிரபு மற்றும் ‘அக்ஷயா’ நிறுவனர் சிட்டிபாபு உள்ளிட்டவர்கள் நேற்று நிருபர்களை சந்தித்தனர்.
அப்போது நடிகர் பிரபு கூறியதாவது; “சாந்தி திரையரங்கம், சிவாஜி கணேசனின் லட்சக் கணக்கான ரசிகர்கள் கூடி மகிழ்ந்த இடம். சிவாஜி கணேசன் இருந்த போதும், இல்லாத இன்றும்கூட அவரைப் பற்றி அதிகம் பேசும் ஒரு நினைவிடமாகவே மாறியிருக்கிறது”.
“அன்னை இல்லத்தை சிவாஜி கணேசன் கட்டும்போது 3 அறைகள் வைத்து கட்டினார். இப்போது குடும்பம் பெரிதாக வளர்ந்து 7 அறைகள் கொண்ட வீடாக மாறிவிட்டது. அதற்கு தகுந்தாற்போல தொழில் வளர்ச்சியையும் கவனிக்க வேண்டும்”.
“சாந்தி திரையரங்கம் 50 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இந்த கட்டிடத்தை அப்படியே விட்டுவிட முடியாது. எங்களுக்கு சினிமா மட்டும் தான் எடுக்கத்தெரியும். கட்டிடம் எல்லாம் கட்டத் தெரியாது. அந்தப் பணியை ‘அக்ஷயா’ குரூப்ஸ் சிட்டிபாபு கையில் எடுத்துக்கொள்ள முன்வந்தார்”.
“சாந்தி திரையரங்கம் புதிய அவதாரமாக மாறட்டும் என்று ராம் குமாரும் விரும்பினார். இதை நல்ல சந்தர்ப்பமாக கருதி இப்போது இருக்கும் திரையரங்க கட்டிடத்தை இடித்து அதே இடத்தில் திரையரங்கத்தோடு கூடிய பொழுதுபோக்கு வணிக வளாகமாக கட்டிடமாக உருவாக்க திட்டமிட்டிருக்கிறோம்”.
“முழு பொழுதுபோக்கு இடமாக இதனை மாற்ற, இன்னும் சில மாதங்களில் அதற்கான பணிகள் தொடங்க இருக்கிறோம். பணிகள் தொடங்கும் வரை தற்போது போல அரங்கில் திரைப்படங்கள் திரையிடப்படும். குறைந்தது 2 ஆண்டுகளுக்குள் புதிய கட்டிடம் இந்த இடத்தில் உருவாகும்” என பிரபு தெரிவித்தார்.
1961-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட சாந்தி திரையரங்கில் திரையிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் ‘தூய உள்ளம்’. சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த ‘பாவமன்னிப்பு’ அதே ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. அவரது நடிப்பில் திரையிடப்பட்ட முதல் படம் இது.
சென்னையில் முதல் குளிர்சாதன வசதியுடன் உள்ள திரையரங்கம் என்ற பெருமை கொண்ட சாந்தி திரையரங்கில் சிவாஜி கணேசன் நடித்த பாவ மன்னிப்பு, திருவிளையாடல், வசந்தமாளிகை, தங்க பதக்கம், திரிசூலம், முதல் மரியாதை ஆகிய படங்கள் 25 வாரங்கள் ஓடின. பிரபு நடித்த ‘சின்னத்தம்பி’ 205 நாட்கள் ஓடின. ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ 888 நாட்கள் ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.