கோலாலம்பூர், மார்ச் 4 – ஐஎஸ்ஐஎஸ் வெளியிட்டுள்ள தலையை வெட்டும் காணொளி ஒன்றில் இரு மலேசியர்கள் இருப்பதாக புக்கிட் அம்மான் தீவிரவாத தடுப்பு மையம் அடையாளம் கண்டுள்ளது.
அவர்கள் முகமட் ஃபாரிஸ் அன்வார் (வயது 20) மற்றும் முகமட் வாண்டி முகமட் ஜெடி (வயது 26) ஆகிய இருவரும் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
முகமட் ஃபாரிஸ் கெடா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், முகமட் வாண்டி மலாக்காவைச் சேர்ந்தவர் என்றும் புக்கிட் அம்மான் தீவிரவாதத் தடுப்பு அமைப்பின் சிறப்பு பிரிவு மூத்த துணை ஆணையர் டத்தோ ஆயுப் கான் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 20-ம் தேதி பேஸ்புக்கில் தனிநபர் ஒருவரின் கணக்கில் வெளியிடப்பட்டுள்ள அந்த 30 நொடிகள் கொண்ட காணொளியில் ஃபாரிஸ் தனது ஆட்காட்டி விரலால் சைகை கொடுக்க, முகமட் வாண்டி தலை வெட்டுவதை ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தோனேசியா, மலேசியா போராளிகள் அடங்கிய ‘மாஜ்முவா அல் அர்காபிலி’ என்ற புதிய இயக்கத்தில் இந்த இரு மலேசியர்களும் சேர்ந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
சிரியா, ஈராக்கை சேர்ந்த கத்தீபா நூசந்தாரா லிட் டௌலா இஸ்லாமியா என்ற பழைய இயக்கத்தின் பெயர் மாற்றப்பட்டு இந்த புதிய இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.