Home அவசியம் படிக்க வேண்டியவை முரசு 30ஆம் விழா – “முரசொலிக்கும் முப்பதாவது ஆண்டு” – தமிழக முனைவர் பெ.சந்திரபோஸ் பாராட்டு!

முரசு 30ஆம் விழா – “முரசொலிக்கும் முப்பதாவது ஆண்டு” – தமிழக முனைவர் பெ.சந்திரபோஸ் பாராட்டு!

1047
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 6 – (எதிர்வரும் மார்ச் 14ஆம் தேதி சனிக்கிழமை, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சில் உள்ள நுண்கலைக் கோயில் மண்டபத்தில் மாலை 7.00 மணி முதல், இரவு 9.30 மணி வரை, “இணைமதியம்” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் முரசு அஞ்சல் 30ஆம் ஆண்டு நிறைவு விழா – மற்றும் செல்லினம், செல்லியல் தளங்களின் புதிய தொழில் நுட்ப மேம்பாடுகள் அறிமுகம் காணும் தொழில் நுட்ப விழா – குறித்து கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, கணினி மற்றும் அலைபேசிகள் குறித்தும், அவற்றின் பயன்பாடு பற்றியும் தொடர்ந்து தமிழகத்தின் “தினமலர்” நாளிதழில் கட்டுரைகள் எழுதி வரும் பேராசிரியர் பெ.சந்திர போஸ் (படம்) வழங்கியுள்ள சிறப்புக் கட்டுரை இது)

Dr Chandra Boseஉலகெங்கும் தமிழை, டிஜிட்டல் தமிழாக முரசொலித்த ”முரசு அஞ்சல்” இன்று தன் முப்பதாவது ஆண்டு விழாவினைக் கொண்டாடுகிறது என்பதை எண்ணுகையில், என் தகவல் தொழில் நுட்பம் குறித்த கட்டுரைகளின், என் தமிழ் இலக்கியப் படைப்புகளின் உயிராக இருந்த முரசு அஞ்சலுக்கு நன்றி கூறி, அதன் வளர்ச்சியில் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன்.

ஆண்டு 2000ல், முரசு அஞ்சல் தொகுப்பின் அன்றைய பதிகை வெளியான போது, முதன் முதலாகத் தமிழ் மென்பொருளுக்கு – ஏன் மென்பொருள் ஒன்றுக்கு ”பயனாளர் கையேடு” ஒன்றினைத் தமிழில் வெளியிட்ட பெருமை முரசு அஞ்சல் தொகுப்பிற்கே சேரும்.

#TamilSchoolmychoice

அதனை எழுதித் தர எனக்கு வாய்ப்பளித்து, அதனையே அதிகார பூர்வ பயனாளர் கையேடாக வெளியிட்ட திரு முத்து நெடுமாறன் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்து, முரசு அஞ்சல் மற்றும் திரு முத்துவுடன் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக,  எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

முரசு அஞ்சலின் முதல் தோற்றம்

தமிழைக் கணினியில் எவ்வாறு கொண்டு சென்று அமைப்பது என்பது குறித்து கணினி வல்லுநர்கள் தடுமாறிய போது, நண்பர்களைக் கலந்தாலோசித்து, திஸ்கி (TSCII – Tamil Script Code for Information Interchange) என்ற கட்டமைப்பினை உருவாக்குவதில் பாடுபட்டு, அதனை வடிவமைத்துக் கொண்டு வந்தவர்களுள் முக்கியமானவர் திரு முத்து.

அதன் அடிப்படையிலேயே, முரசு அஞ்சல் முதன் முதலில் அறிமுகமானது. தனிப்பட்ட ஏற்புகளின் அடிப்படையில், பல அஞ்சல் குழுக்களிலும், பல தமிழ்ச் செயலிகளிலும் பயன்படுத்தப்பட்ட திஸ்கி கட்டமைப்பு, பின் நாளில், 2007ல், Internet Assigned Numbers Authority (IANA) என்னும் பன்னாட்டளவிலான அமைப்பில் பதிவு செய்யப்பட்ட ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பின்னர், இந்த கட்டமைப்பு குறித்து பல முன்வைப்புகள்  வந்த போது, உலகெங்கும் உள்ள அனைத்து தமிழர்களின் எதிர்பார்ப்பினையும் முத்து தன் முரசு அஞ்சலில் ஈடேற்றினார்.

sellinam-promo-1024x500தமிழக அரசு, அரசின் கட்டமைப்பாக டேப் மற்றும் டேம் (TAB and TAM) ஆகியவற்றை அறிமுகப்படுத்திய போது, அவற்றையும், தொடக்கத்திலிருந்து உலகத் தமிழ்ச் சமுதாயம் கணினியில் வளர்த்த திஸ்கி (TISCII) கட்டமைப்பினையும் முரசு அஞ்சலில் அமைத்து வழங்கினார்.

இவ்வகையில், தகவல் தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்ட வளர்ச்சி மாற்றங்களை  மட்டுமின்றி, அனைத்து தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் மதிப்பு கொடுத்து, தமிழை எப்படியாவது சிறந்த கணினி மொழியாகக் கொண்டு வர வேண்டும் என்பதே தன் இலக்கு என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு தெரியப்படுத்தினார்.

தமிழ் யூனிகோட் முதன் முதலில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் தன் இயக்க முறைமையான விண்டோஸ் 2000 ல் தரப்பட்டது, உடனே, சற்றும் தாமதிக்காமல், தன் முரசு அஞ்சல் தொகுப்பில், யூனிகோட் வகையை அமைத்து, யூனிகோட் தமிழ் மூலம், உலகத் தமிழர்கள் அனைவரும், தமிழைக் கணினிகளில் பயன்படுத்த, முதல் தொகுப்பாகத் தன் முரசு அஞ்சலை  முத்து நெடுமாறன் தன் முரசு அஞ்சல் மூலம் வழி வகுத்தார்.

1985 ஆம் ஆண்டுகளில் கணினிக்கு நான் அறிமுகமானபோது, நம் தமிழ் மொழி இந்த கணினித் திரைகளில் பழுதில்லாமல், முழுமையாகத் தோற்றமளிக்காதா என்று ஏங்கினேன்.

அப்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டாஸ் இயக்கமே கணினியை இயக்கி வந்தது. அதில் ஒரு சிலரின் முயற்சியால், தமிழ் மொழி தோன்றினாலும், அது முழுமையாக, விரைவான தமிழ்ப் பயன்பாட்டிற்கு வழி வகுக்காததாக இருந்தது. 1987ல் வெளியான ஒரே ஒரு தமிழ் மென்பொருள், பல்கலைக் கழகங்கள் மட்டுமே வாங்கிப் பயன்படுத்தும் விலையில் இருந்து வந்தது.

அப்போதுதான் முத்து நெடுமாறன் தான் உருவாக்கிய முரசு என்னும் மென்பொருளை ’முரசு அஞ்சல்’ என்னும் பெயரில் இலவசப் பதிப்பாக அறிமுகப்படுத்தினார். அதன் தோற்றம், பயன்பாடு, ஆக்கியோர் ஆகியன குறித்து எதுவும் அறியாமலேயே கிடைத்த அது பல தமிழர்களின் ஏக்கங்களை நிறைவேற்றியது. எம்.எஸ். டாஸ் இயக்கத்தில், முரசு அஞ்சல் தன் முதலடியை எடுத்து வைத்தது. பின்னர் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு, பல வசதிகளை அதிகப்படுத்தியது.

 

ஒரு சிலர் கணினியைத் தங்கள் தொழிலுக்குப் பயன்படுத்துவார்கள். சிலர் தங்களின் தேவைக்கு மட்டும் பயன்படுத்துவார்கள். ஆனால் முத்து நெடுமாறன் கணினியையும் கணினித் தமிழையும் தன் சுவாசிக்கும் நேசக் காற்றாகவே கொண்டிருந்தார். அதே நேசக் காற்றினை அனைத்து தமிழர்களும் சுவாசித்துப் பயன்படுத்த வேண்டும் என ஆவலும் கொண்டிருந்தார்.

முத்து நெடுமாறனுடனான முதல் சந்திப்பு

muthu-nedumaran1998ல் இவரை முதன் முதலில் சந்தித்து அளவளாவிக் கொண்டிருந்தேன். அப்போது இந்த உலகமே பைனரி தான். விருப்பு / வெறுப்பு, சுகம் / துக்கம் என நிறையப் பட்டியலிட்டு இறுதியில் ஆண் / பெண் என்றார். அப்படியானால் திருநங்கைகள் யார்? என்றேன். சிறிது கூட சிந்திக்காமல், இறைவனின் மென்பொருளில் ஏற்பட்ட பிழை (BUG) என்றார். இது கணினி உலகை அவர் எவ்வளவு தூரம் ரசிக்கிறார் என்று காட்டியது.

பின் நாளில் “கம்ப்யூட்டர் உலகம்” என்னும் பத்திரிக்கைக்காக பேட்டி எடுத்த போது, முத்து, தான் இளைஞனாக இருந்த போது, கணினி பற்றி கற்றுக் கொள்ள, சோதனைகள் மேற்கொள்ள தன் உறக்கம், உணவு, அடிப்படைச் செலவுகளைக் கூட தியாகம் செய்தார் என்பதைக் கூறியபோது, அவரையே மலைப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

”என்ன பார்க்கிறீர்கள்?” என்று அவர் வினவினார். “நல்ல வேளை நீங்கள் தமிழராகப் பிறந்தீர்கள். இல்லையென்றால், உங்களுடைய ஆர்வமும் உழைப்பும், தியாகமும் இன்னொரு மொழிக்கல்லவோ சென்றிருக்கும்” என்றேன்.

அத்துடன் தான் நேசிக்கும் கணினித் தமிழை உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் சுவாசிக்க வேண்டும் என விரும்பினார். முரசு அஞ்சல் பல மாற்றங்களைக் கொண்ட நிலையில், பத்திரிக்கையில் அது பற்றி எழுதுவதற்காக அஞ்சல் ஒன்று அனுப்பினேன்.

அதில் “முரசு அஞ்சல் அடிப்படைப் பயன்பாட்டிற்கு, இப்போதும் இலவசமாகத் தரவிறக்கத்திற்குத் தரப்படுமா?” என்று கேட்டிருந்தேன்.  அதற்கு அவர் பதிலாக, “நான் இருக்கும் வரை, முரசு அஞ்சல் இருக்கும் வரை, அடிப்படைப் பயன் தொகுப்பு  அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கும்” என ஆணித்தரமாகக் கூறி இருந்தார்.

தமிழ் டிஜிட்டல் மொழியாக உலக அளவில் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் ஒன்றாக வளர வேண்டும் என்பதில் இன்றும் ஆர்வமும், அதற்கான உழைப்பும் முத்து கொண்டுள்ளார் என்பதில் ஐயமே இல்லை.

விண்டோஸ் இயக்கத்தில் செயல்படும் வகையில், 1991 ஆம் ஆண்டில் முரசு அஞ்சல் பதிகை 5 வெளியானது. இந்த மென்பொருள், விண்டோஸ் இயக்கத்தில் (விண்டோஸ் இயக்கம் 3.0) தமிழை முதல் முறையாகக் கொண்டு வந்து உலகெங்கும் பயன்பாட்டிற்குத் தமிழைக் கொண்டு வந்தது.

அதே போல, பின் நாளில், 2004ல், முரசு அஞ்சலை, ஆப்பிள் நிறுவனத்தின் மேக் இயக்கத்திற்கான வகையில், முத்து உருவாக்கித் தந்த போது, அதனை, ஆப்பிள் நிறுவனம் தன் இயக்க முறைமையிலேயே இணைத்து வெளியிட்டது. பொதுவாக, ஆப்பிள் நிறுவனம் தன் இயக்கத்தில் மற்றவர்களின் படைப்பை இணைத்துக் கொள்ளாது. அந்த வகையில், முதல் பெருமையைப் பெற்றது தமிழ் மட்டுமே. அதற்குக் காரணம் அஞ்சல் மென்பொருளின் பிரம்மா முத்து அவர்கள் தான்.

2009ல், ,மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் ஆப்பிள் மேக் இயக்கங்களில், ஒரே மாதிரியான எழுத்துருக்களைப் பயன்படுத்தும் தொழில் நுட்பத்தினைக் கொண்டதாக முரசு அஞ்சல் வெளியானது.

செல்லினம் உருவாக்கம்

sellinam-promo-1024x500கணினிக்கு இணையாக, செறிதிறன் கொண்ட அலைபேசிகள் இயங்கி வருவதனை உணர்ந்த முத்து நெடுமாறன், அலைபேசிகளில் தமிழ் உரை அமைக்கவும், குறுஞ்செய்திகள் அமைத்து அனுப்பவும் தமிழ் பயன்பட வேண்டும் என்ற இலக்கோடு, செல்லினம் என்ற மென்பொருளை 2012 ஆம் ஆண்டு வடிவமைத்தார். இதனை இலவசமாகவே ”கூகுள் ப்ளே மையம்” மூலம் வழங்கினார். இன்று அதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மூன்று லட்சத்தினையும் தாண்டிவிட்டது என்பது, முத்து அவர்களின் தமிழ் ஆர்வத்திற்கு அளிக்கப்பட்ட ஒரு பெருமையாகும்.

ஆப்பிள் நிறுவனம், முத்து வழங்கிய தமிழ் கட்டமைப்பினை ஏற்று,  தன் இயக்கத்தில், தமிழை ஒரு மொழியாக ஏற்றுக் கொண்டது. இது தமிழ் கூறும் நல்லுலகிற்கு, குறிப்பாக ஐபோன் அதிகம் பயன்படுத்தப்படும் அமெரிக்க நாட்டில் வாழும் தமிழர்களுக்குப் பெரும் வாய்ப்பாகவும் பெருமையாகவும் இருந்தது.

எச்.டி.சி. நிறுவனம், தன் ஆண்ட்ராய்ட் அலைபேசிகளில், தமிழை ஒரு மொழியாக அதன் இயங்கு தளத்தில் அமைத்துத் தமிழைப் பெருமைப்படுத்தியதும், முத்து அவர்களின் முயற்சியினாலும், பங்களிப்பினாலும் தான்.

அண்மையில் வெளியான முரசு அஞ்சல் பதிகை 10, முழுமையான ஒரு தமிழ்ச் செயலியாக உருவெடுத்துள்ளது. பல்வேறு விசைப் பலகைகள் பயன்பாடு, பல கட்டமைப்பிற்கிடையே மாற்றிக் கொள்ளும் வசதி, பி.டி.எப். உருவாக்க வசதி, புதிதாக உருவாக்கப்பட்ட 24 யூனிகோட் எழுத்து வகைகள், லிப்கோ அகராதி இணைப்பு, சொற்களை முன் கூட்டியே அறிவிக்கும் வசதி, விண்டோஸ் இயக்க முறைமையோடு இணைக்கப்பட்டு செயல்படுத்தும் வசதி எனப் பல நவீன தொழில் நுட்ப வசதிகளையும், தமிழ் மொழிக்கான பயன்பாட்டு வசதிகளையும் கொண்டதாக வெளியாகியுள்ளதைக் காண்கையில், தமிழ் மொழியை இனி யாராலும் அழிக்க முடியாது. அது இன்றைய டிஜிட்டல் உலகின் தொன்மையான மொழியாகவும் இருக்கும் என்று நாம் பெருமையாகக் கூறலாம்.

அதே போல, மலேசிய அரசு, 2002 மற்றும் 2003 ஆண்டுகளில், முரசு அஞ்சல் தொகுப்பிற்குத் தன் அறிந்தேற்பினை வழங்கி, 523 தமிழ்ப் பள்ளிகளில் பயன்படுத்த ஆணை வழங்கியது. அதே நேரத்தில், தமிழ் நாட்டிலும், தமிழர்கள் வாழும் வேறு நாடுகளிலும், முரசு அஞ்சல், பதிப்பாளர்கள் பயன்படுத்தும் மென்பொருளாக மாறியது. இந்த வகையில், அதிக எண்ணிக்கையில் தமிழில் நூல்கள் வர முரசு அஞ்சல் தொகுப்பும் ஒரு காரணமாக இருந்தது என்றால், அது மிகையாகாது.

முத்து நெடுமாறன் தகவல் தொழில் நுட்பத்தில் எந்த ஒரு மாற்றம் ஏற்பட்டாலும் உடனே அதனைத் தமிழில் கொண்டு வர வேண்டும் என்பதைத் தன் இலக்காக இன்றும் கொண்டுள்ளார் என்பதற்கு அவரின் பல படைப்புகள் நமக்குக் காட்டுகின்றன.

முரசு அஞ்சல் இன்னும் பல மாற்றங்களைக் கொண்டு, வளர்ந்து தமிழை வாழ வைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்படுகிறது. தொடர்ந்து தமிழ்ச் சமுதாயத்திற்கு இந்த தொண்டினை அளித்து வரும் முத்து அவர்களுக்கு, தமிழ்ச்சமுதாயம் என்றும் கடமைப்பட்டுள்ளது.

 – முனைவர் பெ.சந்திர போஸ், சென்னை, தமிழ்நாடு, இந்தியா.

(கட்டுரையாளர் தற்போது அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் வசித்து வருகின்றார். தமிழக உயர்கல்வித் துறையில் கல்லூரி முதல்வராகப் பணி நிறைவு செய்தவர். தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம் கற்றுத் தருவதிலும், கணினிப் பயன்பாட்டிலும், மொழி பெயர்ப்பிலும் பன்னாட்டளவில் பாராட்டப்பட்டவர். தமிழக அரசுக் கல்லூரிகளில் கணினி பயன்பாடு வளரக் காரணமாக இருந்தவர். முரசு அஞ்சல் வளர்ச்சியில் தொடர்ந்து ஊக்கம் அளித்து வருபவர்)

அவரது மின் அஞ்சல் – drchandrabose@gmail.com