கோலாலம்பூர், மார்ச் 9 – ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லாமல் முதல் முறையாக புத்தம் புதிய தயாரிப்பு ஒன்றை ஆப்பிள் நிறுவனம் இந்த வருடம் அறிமுகப்படுத்த இருக்கிறது. அதுதான் ‘ஆப்பிள் வாட்ச்’ (Apple Watch).
போட்டி நிறுவனங்கள் திறன்பேசிகள் மற்றும் தட்டைக் கணினிகளை வெளியிடும் முன்பே ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபேட்களை வெளியிட்டு பெரும் வெற்றி பெற்று இருக்கிறது. ஆனால் திறன் கைக்கடிகாரங்களை பொருத்தவரை ஆப்பிளின் வரவு தாமதம் தான்.
ஆப்பிளுக்கு முன்பாகவே பல்வேறு நிறுவனங்கள் திறன் கைக்கடிகாரங்களை வெளியிட்டுள்ளன. ஆனால் அதில் அந்நிறுவனங்கள் வெற்றி பெற்றுள்ளனவா என்பது கேள்விக் குறிதான். இந்நிலையில் இன்னும் சில நாட்களில் ஆப்பிள் தனது ஆப்பிள் வாட்ச்சை களமிறக்க உள்ளது.
அனைத்து தயாரிப்புகளிலும் புதுமையைப் புகுத்தும் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த தாயாரிப்பு, தொழில்நுட்ப சந்தைகளின் போக்கை மாற்றும் என்பதற்கான காரணங்களை கீழே காண்போம்:
ஆப்பிள் வரலாறு:
தொழில்நுட்ப சந்தைகளில் மற்ற நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை களமிறக்கி சரிவுகளை சந்தித்த போதெல்லாம் ஆப்பிள் தனது தயாரிப்புகளில் வெற்றி கண்டுள்ளது. இது ஆப்பிளின் ஐபோன், ஐபேட், மேக் கணினிகள், செயலிகள் என அனைத்து தாயாரிப்புகளுக்கும் நிகழ்ந்துள்ளன.
புதுமையிலும் புதுமை, சிறந்தவற்றில் சிறந்தது என்ற செயல்பாடுதான் ஆப்பிளின் இத்தகைய வெற்றிக்கு காரணம். மற்ற நிறுவனங்கள் ஆப்பிளுக்கு போட்டியாக களமிறக்கும் தாயாரிப்புகளை விட ஆப்பிள் சிறந்தவற்றை களமிறக்கும். இதில் ஆப்பிள் வாட்ச் விதிவிலக்கல்ல.
ஆப்பிள் தனது ஐபோன்களை வெளியிடும் பொழுது எத்தகைய எதிர்பார்ப்பு இருக்குமோ அதே அளவிலான எதிர்பார்ப்பு ஆப்பிள் வாட்ச் மீதும் இருக்கிறது. இதுவே ஆப்பிளின் தனிச் சிறப்பு. அதற்கு காரணம் ஆப்பிள் நிறுவனத்தின் நம்பகத்தன்மை.
ஆப்பிள் வாட்ச்சின் சிறப்பான வசதிகள்:
போட்டி நிறுவனங்கள் தாயாரித்துள்ள திறன் கடிகாரங்களை விட ஆப்பிள் வாட்ச் பல்வேறு சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது. திறன்பேசிகளுக்கு வரும் எல்லா விதமான அறிவிப்புகளையும், குறுந்தகவல்களையும் இந்த கைக்கடிகாரம் காட்டுவதோடு மட்டுமல்லாமல் கார் சாவியாகவும்,
உடல் நலனை கண்காணிக்கும் கருவியாகவும் செயல்பட இருக்கின்றது. மேலும், ஆப்பிள் ‘சிரி’ (Siri) மற்றும் ‘ஆப்பிள் பே’ (Apple Pay) திட்டங்களையும் இதில் செயல்படுத்த முடியும்.
இது போன்ற அனைத்து சாதகமான சூழல் இருந்தாலும், ஆப்பிள் வாட்ச்சின் விலை, மக்கள் தாயாரிப்பினை புரிந்து கொள்ள ஆகும் கால அளவு ஆகியவற்றை பொறுத்து இதன் வர்த்தகம் இருக்கும் என்பது மறுக்க முடியாத ஒன்று.