Home இந்தியா கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி உடைகிறதா?

கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி உடைகிறதா?

408
0
SHARE
Ad

kejrivaalபுதுடெல்லி, மார்ச் 9 – “டெல்லி மக்களுக்கு சேவை செய்யவே என் நேரத்தை செலவிட விரும்புகிறேன். அதனால் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று கெஜ்ரிவால் விடுத்த அறிவிப்பிற்கு மறுநாள், அவரை விமர்சனம் செய்த ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான பிரசாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டனர்.

கெஜ்ரிவாலின் ராஜினாமா கடிதமும் நிராகரிக்கப்பட்டது. மறைமுகமாக இருந்து வந்த ஆம் ஆத்மி கட்சியின் உட்கட்சி பூசல் அதன் பின்பு விஸ்வரூபம் எடுத்தது.

தற்போது அதனை மேலும் பரபரப்பாக்கும் விதமாக அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் பிரசாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ் மீதான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தவருமான மயாங் காந்தி, தன்னை நீக்க கட்சியில் சதி நடப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக அவர் பத்திரிக்கைகளுக்கு அளித்துள்ள பேட்டியில், “ஆம் ஆத்மியின் அரசியல் விவகார குழுவில் இருந்து,யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் ஆகியோரை நீக்குவது என, எடுத்த முடிவை நான் விமர்சித்தேன்”.

“அதனால், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமாக உள்ள சிறு பிரிவினர், என்னை அதிருப்தியாளராக சித்தரித்து, கட்சியில் இருந்து நீக்க முற்படுகின்றனர்” என்று கூறியுள்ளார்.

இந்தப் பிரச்னையால், ஆம் ஆத்மி கட்சி விரைவில் இரண்டாக உடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி முதல்வராக பதவியேற்ற 45-வது நாளில் முதல்வர் பதவியையே ராஜினாமா செய்த கெஜ்ரிவால், மீண்டும் மக்கள் ஆதரவைப் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் தற்போது டெல்லியில் ஆட்சி அமைத்துள்ளார்.

மக்கள் அவர் மீதும் ஆம் ஆத்மி கட்சியின் மீதும் மிகப் பெரும் எதிர்பார்ப்பை வைத்துள்ள நிலையில், அவை அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக அக்கட்சியின் உட்கட்சி பூசல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இருப்பது டெல்லி மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.