சென்னை, மார்ச் 8 – தமிழ் சினிமாவின் முன்னணி கவிஞர்களுள் ஒருவரான தாமரை தனது கணவரைக் காணவில்லை என்றும் அவருடன் தன்னை சேர்த்து வைக்கும்படியும் கூறி கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வந்தார். தாமரையுடன் வாழ விருப்பமில்லை என்று தாமரையின் கணவர் தியாகு கூறியும், அவரின் போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில், கணவர் தியாகு நேரில் சந்தித்து தாமரையிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டதால் அவர் தனது 8 நாட்கள் போராட்டத்தை கைவிடுவதாக நேற்று அறிவித்தார்.
தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் தாமரைக்கும், அவருடைய கணவரும் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவருமான தியாகுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக தியாகு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார். இதனைக் கண்டித்து தாமரை தர்ணா போராட்டத்தில் இறங்கினார்.
8-ஆம் நாளான நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என் கணவர் தியாகுவின் செயல்பாடுகள் குறித்து தமிழ் ஆர்வலர்கள் தெரிந்து கொள்வதற்காகத் தான் போராட்டத்தில் ஈடுபட்டேன். அவர் நேரில் வரவேண்டும்” என்று கூறினார்.
இந்நிலையில், தியாகு, தாமரை தர்ணா நடத்திய வள்ளுவர் கோட்டம் பகுதிக்கு நேரடியாக வந்தார். அவர் தாமரையிடம், கடந்த எட்டு நாட்களாக நடத்திய போராட்டத்தால் ஏற்பட்ட மனப் பாதிப்பிற்கு மன்னிப்பு கோரினார். மேலும், இருவருக்கும் இடையேயான பிரச்சனையை பொதுவானவர்கள் வைத்து தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறினார்.
அதற்கு பின்னர் தாமரை தனது போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார்.