கோலாலம்பூர், மார்ச் 8 – கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசிய அரசியல் அரங்கில் தவிர்க்க முடியாத தலைவராக வலம் வந்து கொண்டிருக்கும் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரும், தெற்காசிய நாடுகளுக்கான கட்டமைப்புத் துறை சிறப்புத் தூதருமான டத்தோஸ்ரீ ச.சாமிவேலு இன்று தனது 79வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்.
மலேசிய இந்தியர்களின் அரசியல், சமுதாய வரலாற்றில் ஒரு முக்கிய இடம் சாமிவேலுவுக்கு எப்போதும் நிரந்தரமாக இருந்து வரும்.
மஇகாவின் தேசியத் தலைவராகவும், அரசாங்க அமைச்சராகவும் 31 ஆண்டுகள் பதவி வகித்தது –
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை இரண்டு முறை மலேசியாவில் நடத்தியது –
எம்ஐஇடி என்ற கல்விக் கழகம் தோற்றுவித்தது – அதன் மூலம் ஏய்ம்ஸ்ட் மருத்துவப் பல்கலைக்கழகம் உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வருவது –
தேசியத் தலைவர் பதவியை விட்டு விலகிய பின்னரும், தனது அனுபவங்களையும், உழைப்பையும் அரசாங்கப் பணிளுக்கு அர்ப்பணிக்க, தெற்காசிய நாடுகளுக்கான கட்டமைப்புத் துறை சிறப்புத் தூதராக கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வருவது –
இப்படியாக பல முனைகளிலும் தனது முத்திரைகளைப் பதித்து வந்திருப்பவர் சாமிவேலு.
கட்சியின் தேசியத் தலைவராக அவர் ஆட்சி நடத்திய 31 ஆண்டுகளில் அவரது அரசியல் அணுகுமுறை குறித்து பல்வேறு கருத்து முரண்பாடுகள், எதிர்வினை விமர்சனங்கள் இருக்கலாம்.
ஆனாலும், சாமிவேலு என்ற மனிதரிடமிருந்து, இளைஞர்களும், இன்றைய அரசியல்வாதிகளும், எதிர்கால அரசியல் கனவுகளோடு வலம் வரும் அரசியல் பாலகர்களும், கற்றுக் கொள்ள வேண்டிய அம்சங்கள் நிறைய இருக்கின்றன.
ஒரு பொது இடத்தில் ஒரு தலைவன் எப்படிப் பழக வேண்டும், எவ்வாறு கம்பீரமாகத் தோற்றமளிக்க வேண்டும், எந்த மாதிரி ஆடைகள் உடுத்தி உலா வரவேண்டும் என்பதிலும் –
இரவு பகல் பாராமல் கட்சித் தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் தொடர்புகளை வைத்துக் கொள்வதிலும்,
மேடையேறிவிட்டால் பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் எவ்வாறு கவர்ச்சிகரமாக – கம்பீரமாக உரையாற்ற வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவதிலும் –
புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதிலும், பின்பற்றுவதிலும் வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்ததிலும் –
எத்தனை வயதானாலும், கடுமையான, சளைக்காத உழைப்புதான் உயர்வு தரும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டுவதிலும்,
தனக்குத் தெரிந்தவர்களின் இல்லத்தில் நடக்கும் சந்தோஷ நிகழ்வுகளிலும், துக்க நிகழ்வுகளிலும் சரிசமமாகக் கலந்து கொண்டு நேரம் பார்க்காமல் அவர்களின் மகிழ்வையும், துக்கத்தையும் பகிர்ந்து கொள்வதிலும்,
அரசியல், சமூக நடப்புகளில் ஆர்வமுடன் பங்கு கொள்வதிலும்,
மரியாதை கொடுத்து அழைத்தால் நிகழ்வுகளுக்கு மறுக்காமல் தான் சொன்ன நேரத்துக்கு வருகை தருவதிலும்,
சாமிவேலு இன்றைக்கும், என்றைக்கும் அனைவருக்கும் ஒரு பாடநூலாக இருக்கின்றார் என்பதிலும்,
அவரிடமிருந்து நாம் கற்றுக் கொண்டு பின்பற்ற பல நல்ல அம்சங்கள் இருக்கின்றன என்பதிலும் யாருக்கும் இருவித கருத்துகள் இருக்க முடியாது.
இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலுவுக்கு செல்லியல் குழுமத்தின் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைப் புலப்படுத்திக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
-இரா.முத்தரசன்