கோலாலம்பூர், மார்ச் 8 – அன்வார் ஆதரவு பேரணியில் முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் படம் இடம்பெற்ற பதாகையுடன் பங்கேற்ற சிலரால் குழப்பம் நிலவியது. இதையடுத்து அன்வாரின் ஆதரவாளர்கள் அக்குழுவினரை உடனடியாக அங்கிருந்து செல்லுமாறு நிர்பந்தித்தனர்.
நேற்றைய பேரணி பிரதமர் நஜிப்புக்கு எதிரான கூட்டமாகவும் நடத்தப்பட்டது. நஜிப்புக்கு எதிரான வாசகங்கள் தாங்கிய பதாகைகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள்
நேற்று சனிக்கிழமை பிற்பகல் கோலாலம்பூரில் நடைபெற்ற பேரணியில், ‘பிகேஆர் அடிமட்டத் தொண்டர்கள் மன்றம்’ என்ற பெயர் கொண்ட பதாகையுடன் சிலர் வந்து சேர்ந்தனர். அப்பதாகையில் மகாதீரின் படமும் இடம்பெற்றிருந்தது.
இதையடுத்து, மகாதீரும் அன்வாரும் நீண்ட காலம் நலமாக வாழ வேண்டும் என அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். எதற்காக இவ்வாறு முழக்கங்கள் எழுப்புகிறீர்கள்? என அன்வார் ஆதரவாளர்கள் அக்குழுவினரிடம் கேள்வி எழுப்பியபோது, “துன் மகாதீருடன் பிகேஆர் இணைந்து செயல்பட வேண்டும். ஏனெனில் மகாதீரால் மட்டுமே அன்வாரை விடுவிக்க முடியும்,” என்று அவர்கள் பதில் அளித்தனர்.
“மகாதீரை குழந்தை என நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அவர் அபாரமான விஷயங்களை செய்யக்கூடிய ஆற்றல் மிக்கவர். அன்வார் சிறைக்குச் சென்றபின் பிகேஆர் கட்சியில் தைரியசாலிகள் இல்லை. அஸ்மின் அலியும் கூட மௌனம் காக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் மகாதீர் மட்டுமே எங்களின் நம்பிக்கையாக உள்ளார்,” என அக்குழுவைச் சேர்ந்த ஜஸ் என்பவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எனினும் இக்குழுவினரின் நடவடிக்கைகளால் சங்கடமடைந்த பிகேஆர் உறுப்பினர்கள் சிலர் மகாதீருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். மேலும் கட்சி உறுப்பினர் அட்டையைக் காண்பிக்குமாறு அக்குழுவினரிடம் கேட்டனர்.
இதையடுத்து தனது உறுப்பினர் அட்டையை ஜஸ் காண்பிக்க, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் வலுத்தது. சுமார் 30 நிமிடங்களுக்குப் பின்னர் மகாதீரின் ஆதரவாளர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
படம்: EPA