Home தொழில் நுட்பம் முரசு 30ஆம் விழா: “முரசு அஞ்சல் – முத்து” டாக்டர் சுப. திண்ணப்பன் அனுபவங்கள்!

முரசு 30ஆம் விழா: “முரசு அஞ்சல் – முத்து” டாக்டர் சுப. திண்ணப்பன் அனுபவங்கள்!

1127
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 8 – (எதிர்வரும் மார்ச் 14ஆம் தேதி சனிக்கிழமை, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சில் உள்ள நுண்கலைக் கோயில் மண்டபத்தில் மாலை 7.00 மணி முதல், இரவு 9.30 மணி வரை, “இணைமதியம்” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் முரசு அஞ்சல் 30ஆம் ஆண்டு நிறைவு விழா – மற்றும் செல்லினம், செல்லியல் தளங்களின் புதிய தொழில் நுட்ப மேம்பாடுகள் அறிமுகம் காணும் தொழில் நுட்ப விழா – குறித்து பிரபல தமிழ்ப் பேராசிரியரும், தற்போது சிங்கப்பூர் சிம் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளருமான டாக்டர் சுப.திண்ணப்பன்  (படம்) தமது எண்ணங்களையும், கருத்துகளையும் இந்த சிறப்புக் கட்டுரையின் வழி ‘செல்லியல்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றார்)

Thinnappan Dr - photo1987 டிசம்பர்! கோலாலம்பூரில் ஆறாவது உலகத்தமிழ் மாநாடு! நான் ‘கணினியும் தமிழ் கற்பித்தலும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை படித்தேன்.

அப்போது தமிழகத்தின் தினமணி ஆசிரியராக இருந்த ஐராவதம் மகாதேவன் அதனைப் பாராட்டியதுடன் தினமணி இதழிலும் வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

அம்மாநாட்டில் திரு முத்தெழிலனும் (முத்து) ‘கணினியும் தமிழும்’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை படித்தார். முரசு அஞ்சல் பற்றியும் அறிமுகம் செய்துவைத்தார். அவர் உரை அனைவரையும் கவர்ந்தது. அவ்வாறு கவரப்பட்டவர்களில் நானும் ஒருவன்.

அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர்க் கல்விக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராக நான் பணியாற்றியபோது தமிழ் இலக்கியக் கலாச்சார மன்றத்தின் சார்பில் 24-1-1988 அன்று ‘கணினியும் தமிழ் கற்பித்தலும்’ என்னும் கருப்பொருளைக் கொண்டு ஒரு கருத்தரங்கு நடத்தினோம்.

சிங்கப்பூர் கருத்தரங்கில் முத்து நெடுமாறன்

சிங்கப்பூர்த் தமிழாசிரியர்கள் 250 பேர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர். அக்கருத்தரங்கில் உரையாற்ற முத்துவையும் அழைத்திருந்தோம். அப்போது பாரதி, ஆதமி, துணைவன் முதலிய தமிழ்க்கட்டளைகளை உருவாக்கியவர்களையும் அழைத்து அவை தமிழ் கற்பித்தலுக்கு எவ்வாறு உதவும் என்பதை விளக்குமாறு கேட்டிருந்தோம். முத்துவும் முரசு அஞ்சல் கட்டளையைச் சிங்கப்பூரில் அறிமுகம் செய்து தமிழ் கற்பித்தலுக்கு அது பயன்படும் பாங்கினை நன்கு விளக்கினார். இதுவே சிங்கப்பூருக்கு முத்துவின் முதல்அறிமுகம்.

Murasu AnjalLogoபின்னர் சிங்கப்பூர்க் கல்வி அமைச்சு, தமிழாசிரியர் சங்கம் முதலிய அமைப்புகள் நடத்திய கருத்தரங்குகள், மாநாடுகள் பலவற்றில் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் அவ்வப்போது அவர் உருவாக்கிய புதிய புதிய மென்பொருள்களையும் சிங்கையில் அறிமுகம் செய்துவைத்தார்-வைக்கிறார்.

கல்விஅமைச்சு முரசு அஞ்சல் மென்பொருளைச் சிங்கப்பூர்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் தமிழாசிரியர்களும் பயன்படுத்தவும் வகை செய்தது. சிங்கப்பூர் நாடாளுமன்றம். நீதிமன்றங்கள். தொடர்பு தகவல்அமைச்சு, ஊடகங்கள் முதலியவற்றிலும் முரசுஅஞ்சல் பயன்படுத்த அரசாங்கம் வழி செய்துள்ளது.

நான் பணியாற்றிய சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம், நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத் தேசியக் கல்விக் கழகம், சிம் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அலுவலகங்களிலும் ஆசிரியர் மாணவர் பயன்பாட்டிலும் முரசு அஞ்சல் பயன்படுத்தப்படுகிறது. எனவே சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் முரசுஅஞ்சல் மிகுந்த செல்வாக்குப் பெற்றுத் திகழ்கிறது என்று கூறலாம்

அனைத்துலக அளவில் நடக்கும் தமிழ் இணைய மாநாடுகளிலும் கலந்துகொண்டு முத்து தம் ஆய்வுத் திறத்தால் ஓய்வின்றி உழைத்துத் தமிழுக்கு ஆக்கமும் ஊக்கமும் ஊட்டிவருகிறார். சென்ற முப்பதுஆண்டுகளில் இவர் கணினி உலகில் அடைந்த அனைத்துலகப் புகழ்மிக்க சாதனைகளையும் வளர்ச்சியையும் கண்டு வியக்கிறேன். பாராட்டுகிறேன். இன்னும் வளர்ந்து வளம்பெற வாழ்த்துகிறேன்.

“25 ஆண்டுகளாக முரசு அஞ்சல் பயன்படுத்துகின்றேன்”

நான் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக முரசு அஞ்சல் பயன்படுத்தி வருகிறேன். மென் தட்டு எனத் தொடங்கிக் கணினி வட்டில் வளர்ந்து இணையவழி உலாவிய நிலையில் முரசு அஞ்சல் மென்பொருள் தரப்பட்ட முறையை நான்அறிவேன்.

ரோமன் வரிவடிவத் தட்டச்சு முறையும் முரசுஅஞ்சலில் இருப்பதால் தமிழுக்கெனத் தனியாகத் தட்டச்சுச் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லாமல் போகிறது. ஆங்கிலத்தில் தட்டச்சுச் செய்யத் தெரிந்தவர்கள் தமிழில் அடிக்க முடிகிறது. இதனால் பலர் பயன் பெற்றார்கள். அவர்களில் நானும் ஒருவன்.

எழுத்துருக்கள் பார்க்க அழகாகவும் படிக்க எளிதாகவும் உள்ளன. யூனிகோடு முறை வசதி இருப்பதால் எத்தகைய மென்பொருள் வழித் தட்டச்சு செய்திருந்தாலும் எளிதில் மாற்றிக் கொள்ள முரசு அஞ்சல் செய்யும் உதவி எனக்குப் பேருதவியாக இருக்கிறது. முன்பு கணியன் மென்பொருள் வழியும் மற்ற மென்பொருள்வழியும் தட்டச்சுச்செய்த என் கட்டுரைகள் பலவற்றை யூனிகோடுவழி மாற்றிப் பலரும்படிக்க உதவினேன்.

மின்னஞ்சல் தமிழில் எளிதாக அனுப்பவும் என்னால் முடிகிறது. இணையத்தில் தேடுபொறியில் தமிழைப் பயன்படுத்திப் பலன் பெறவும் இயல்கிறது. திண்மைத்தமிழ் என்னும் பெயரில் ஓர் இல்லப்பக்கம்,  முரசு அஞ்சலைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ளேன்.

கைத்தொலைபேசியில் முரசு அஞ்சலைக் கீழிறக்கம்  செய்துகொண்டு இணையச் செய்திகளைப் பார்த்தும் கேட்டும் வருகிறேன். தமிழில் குறுஞ்செய்தி அனுப்பவும் பெறவும் முடிகிறது.

“முத்து நெடுமாறனின் பயிலரங்கில் நான்”

 

Sellinam-promo-Imageசெல்லினத்தைக் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களைக் கொண்டு சிங்கையில் வெளியிட்ட நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன். சிங்கப்பூர்ப் புத்தக மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் முத்து நடத்திய மின்நூல் பயிலரங்கிலும் நான் கலந்துகொண்டேன். நான் வகுப்பறையில் பாடங்களைக் கற்பிக்கும் போதும் கருத்தரங்குகளில் கட்டுரைகள் படிக்கும்போதும்  ஒலி-ஒளிப் படைப்புகள் (Power point presentation) உருவாக்க  முரசு அஞ்சல் மென்பொருள் உதவியாக இருக்கிறது. மாணவர்கள், உறவினர்கள், நண்பர்கள் பலருக்கும் முரசு அஞ்சல் பயன்படுத்தப் பரிந்துரை செய்வது என் வழக்கம்.

முரசு அஞ்சல் வழிகாட்டிக் கையேடுகள் தமிழ், ஆங்கிலம் இருமொழியிலும் இருப்பதால் பலரும் பயன்பெற முடிகிறது. தமிழ்க் கையேடுகளில் உள்ள  கலைச் சொல்லாக்கம் அறிவியல் தமிழுக்கு ஆக்கம் ஊட்டும் வகையில் உள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டும். பயனர்கள் (user),  தானியங்கிப் பிழைதவிர்ப்பி (auto correct) இவை ஒரு சில எடுத்துக்காட்டுகள்.

மலேசியக் கவிஞரும் மூத்த தமிழாசிரிருமான முரசு நெடுமாறன் அவர்களின் மகன் முத்து. எனவே அவர்க்குத் தமிழ்ப்பற்றும் தமிழார்வமும் இருப்பது இயல்பே ஆகும். கணினியியல் வல்லுநரான முத்து கன்னித் தமிழைக் கணினிவழித் தரணி முழுதும் பரப்ப முயன்ற முயற்சியே முரசுஅஞ்சல் உருவாக்கப் பணி.

அவர் உரையாற்றும் ஒவ்வொரு மேடையிலும் ஆங்கிலத்திற்குள்ள கணினிவழி வசதிகள் அனைத்தையும் தமிழுக்குத் தருவதே என் தலையாய நோக்கம் என்று கூறுவார். இது தமிழுக்குத் தொண்டாற்றத் துடிக்கும் அவர் துடிப்பை அல்லவா காட்டுகிறது?

மேலும் முத்துவின் மேடைப்பேச்சு ‘கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும்’ தன்மையது.  நகைச்சுவை, எளிமை, இனிமை நடமாட நல்ல தமிழில் அமைந்திருக்கும். முத்துவின் ஒவ்வொரு மேடைப் பேச்சும் தமிழ்த்தாயை நோக்கி ‘உன்னைத் தரணியோர் போற்றச்செய்வேன். அஞ்சல் (அஞ்சாதே)’ என முரசு கொட்டி ஆர்ப்பரிப்பது போன்றது.

முப்பது ஆண்டு நிறைவு காணும் முரசு அஞ்சலை எவ்வாறு வாழ்த்துவது என எண்ணிப் பார்த்தேன், பாரதியைப் பாராட்டிய பாரதிதாசன் வரிகள் நினைவுக்கு வந்தன..

‘ என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்

தமிழால் பாரதி தகுதி பெற்றதும்

பாரதியால் தமிழ் தகுதி பெற்றதும்’ 

என்கிறார் பாரதிதாசன். அதுபோல  நான் ‘என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன் முரசு அஞ்சலால் கணினித் தமிழ் வளர்ச்சி பெற்றதும், கணினித் தமிழால்  முரசுஅஞ்சல் வளர்ச்சி பெற்றதும்’ ..

வளர்க முரசு அஞ்சல்!  வாழ்க முரசு அஞ்சல் வளம் பல பெற்று!

வெற்றியெட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே’—பாரதியார்

-டாக்டர் சுப.திண்ணப்பன்

(டாக்டர் சுப.திண்ணப்பன் 1980ஆம் ஆண்டுகளில் மலாயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையில் மொழியியல், இலக்கணத் துறை விரிவுரையாளராகப் பணியாற்றிவர்)