டாக்கா, மார்ச் 9 – வங்க தேசத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். குண்டு வெடிப்பு நிகழ்ந்த பகுதியை சுமார் 10 நிமிடத்திற்கு முன் அவர் பயணம் மேற்கொண்ட கார் கடந்து சென்றதாகவும், சற்றே தாமதித்திருந்தாலும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வங்க தேசத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் அரங்கேறியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இதையடுத்து கடந்த இரு மாதங்களாக தலைநகர் டாக்காவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இச்சமயம் ஆளுங்கட்சியினர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. மேலும் வாகனங்களை எரிப்பது, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவது என வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. இத்தகைய வன்முறை சம்பவங்கள் காரணமாக நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் டாக்கா அருகே உள்ள உத்யன் என்ற பகுதியில் ஆளும் அவாமி லீக் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்காக பிரதமர் ஷேக் ஹசீனா காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது டாக்கா நகரத்தின் முக்கிய சந்தைப் பகுதியான கர்வான் பஜாரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. நல்ல வேளையாக குண்டு வெடிப்பிற்கு 10 நிமிடம் முன்னரே பிரதமர் ஷேக் ஹசீனாவின் வாகனம் அந்த இடத்தை கடந்துவிட்டது.
இதையடுத்து மயிரிழையில் அவர் உயிர் தப்பினார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமரைக் குறிவைத்து குண்டு வெடிப்பை நிகழ்த்தியது யார் என்று அந்நாட்டுக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.