புதுடெல்லி, மார்ச் 12 – நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பரேக் உட்பட 6 பேர் அடுத்த மாதம் 8-ஆம் தேதி ஆஜராக டெல்லி சிபிஐ தனி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஏலம் முறையை பின்பற்றாமல் தகுதியற்ற நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி) கூறியது.
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்தியது. முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்டதால், சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 204 நிலக்கரி சுரங்கங்களின் உரிமத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
இதையடுத்து நிலக்கரி சுரங்கங்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கிறது.
ஒடிசாவில் உள்ள தலபிரா-2 சுரங்கம் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு கடந்த 2005-ஆம் ஆண்டு முறைகேடாக ஒதுக்கப்பட்ட வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யும்படி அதன் தலைவர் குமாரமங்கலம் பிர்லா, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த 2005-ஆம் ஆண்டு கடிதம் எழுதியிருந்தார்.
அவரது பரிந்துரையின் பேரிலேயே இந்த சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக மன்மோகன் சிங்கிடம் சிபிஐ விசாரணை நடத்தும்படி டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.
இதையடுத்து மன்மோகன் சிங்கிடம் சிபிஐ விசாரணை நடத்தி அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பாக மன்மோகன் சிங், குமாரமங்கலம் பிர்லா, நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பி.சி.பரேக் உட்பட 6 பேர், டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அடுத்த மாதம் 8-ஆம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்ப சிபிஐ நீதிபதி பரத் பரசர் உத்தரவிட்டார்.