Home தொழில் நுட்பம் இன்று ‘இணைமதியம்’ தமிழ்த் தொழில்நுட்ப விழா!‏

இன்று ‘இணைமதியம்’ தமிழ்த் தொழில்நுட்ப விழா!‏

697
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 14 – முரசு அஞ்சல் 30ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் விதத்திலும், செல்லினம், செல்லியல் தளங்களின் தொழில் நுட்ப புதிய மேம்பாடுகளை அறிமுகப்படுத்தும் விதத்திலும் ‘இணைமதியம்’ எனும் தமிழ்த் தொழில்நுட்ப வரலாற்று விழா,  இன்று மார்ச்14ஆம் நாள், சனிக்கிழமை, கோலாலம்பூர் பிரிக்பீல்ட்சில் உள்ள நுண்கலைக் கோயில் மண்டபத்தில் (டெம்பள் ஆப் பைன் ஆர்ட்ஸ்) மாலை 7.00 மணி முதல் இரவு 9.30 மணிவரை நடைபெறவுள்ளது.

MURASU 30 years 600 x 600

மலேசியத் துணைக் கல்வி அமைச்சர் மாண்புமிகு ப.கமலநாதன் இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகின்றார்.

#TamilSchoolmychoice

‘முரசு அஞ்சல்’ மென்பொருள் பயன்பாட்டோடு நெடுங்காலம் தொடர்பு கொண்டிருந்த சில முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் சிறப்பிக்கப்படவுள்ளனர். முரசு அஞ்சல் மென்பொருளின் முதல் கட்ட பயனர்களுக்கு விருதுகள் வழங்கப்படவிருப்பதோடு, இக்குழுமத்தின் வளர்ச்சிக்கு பெரும் ஆதரவு தரும் நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

மலேசியத் தமிழர்கள் பெருமைப் படக் கூடிய அளவில், தமிழ்க் கணினித் துறையில் ஈடுபாடுடைய உலகத் தமிழர்கள் பயனடையும் அளவில் சில முக்கிய அறிவிப்புகளும் இந்த “இணைமதியம்” நிகழ்வில் வெளியிடப்படவிருக்கின்றன.

முப்பதாண்டுகள் நிறைவைக் காணும் முரசு அஞ்சலில், குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் சேர்க்கப்பெற்று, கணினித் தமிழ்ப் பயன்பாட்டை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில் புதிய பதிப்பு ஒன்றும் இந்த 30ஆம் ஆண்டு வரலாற்று விழாவில் வெளியிடப்படவுள்ளது.

Murasu AnjalLogoஅதே வேளையில், செல்லினத்தினத்தைப் பயன்படுத்தி கையடக்கக் கருவிகளில் தமிழை உள்ளிடுவதை மேலும் எளிமையாக்கவும், இப்போதைய பதிப்பில் உள்ள பரிந்துரைப் பட்டியல் வசதியை மேம்படுத்தவும் புதிய மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. அது தொடர்பான அறிவிப்புகளும், இவ்விழாவில் அறிவிக்கப்படவுள்ளன.

மேலும், முத்து நெடுமாறன் தொழில் நுட்ப ஆலோசகராகவும், வடிவமைப்பாளராகவும் செயல்பட்டு உருவாக்கிய இணையச் செய்தித் தளம் ‘செல்லியல்’ இணையத்தளமும் அதன் முகப்பு உட்பட பல்வேறு மாறுதல்களைக் காணவுள்ளது.

அறிமுகம் கண்டது முதல், கடந்த இரண்டு ஆண்டுகளாக, மலேசிய ஊடகத் துறையில் செல்லியல் தனி முத்திரை பதித்திருப்பதோடு, மலேசியாவிலேயே இணையம், மற்றும் கையடக்கக் கருவிகளில் ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் வெளிவரும் ஒரே ஊடகத்தளம் என்ற சிறப்பையும் செல்லியல் பெற்றுள்ளது.

Selliyal Logo 440 x 215அது மட்டுமன்றி, செய்திகளை உடனுக்குடன், உலகெங்கிலும் உள்ள பயனர்களின் திறன்பேசிகளுக்குக் குறுஞ்செய்தி வடிவில் தமிழிலேயே – அதுவும் இலவசமாகக் — கொண்டு சேர்க்கும் அதி நவீன தொழில் நுட்ப அம்சத்தையும் வெற்றிகரமாக செல்லியல் செயல்படுத்தி வருகின்றது.

செல்லியல் தளமும் தற்போது பல்வேறு முனைகளில், தொழில் நுட்ப அம்சங்களிலும், முகப்பு, உள்ளடக்கம், போன்ற அம்சங்களிலும் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. இது பற்றிய அறிவிப்புகளும் இன்று அறிவிக்கப்படும்.

இந்த அறிவிப்புகளின் மூலமும், அதனைத் தொடர்ந்து சில செயல் நடவடிக்கைகளின் மூலமும், மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளிகளும் அதன் மாணவர்களும், தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் பெரும் பயனடைய முடியும் என்பதால் இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள் அதிக அளவில் வருகை தர வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

இன்று உலகத் தமிழர்களின் வாழ்விலும், கணினி மற்றும் இணைய உலகில் தமிழ் மொழியில் தவிர்க்க முடியாத முக்கிய தளங்களாக – களங்களாக – உருமாறிவிட்ட முரசு அஞ்சல், செல்லினம், செல்லியல் ஆகிய இவை மூன்றும் ஒரு சேர – ஒரே மேடையில் அரங்கேறும் சாதனை விழாவாக,

தமிழுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் வண்ணம் – கணினித் தமிழை அடுத்த கட்டத்திற்குக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் திண்ணமான நோக்குடன், வெற்றி விழாவாக இந்த முரசு அஞ்சல் 30ஆம் ஆண்டு விழா “இணைமதியம்” என்ற தலைப்பில் நடைபெறுகின்றது.

அனைவரும் கலந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.