மாலே, மார்ச் 14 – மாலத்தீவின் முன்னாள் அதிபரும் தற்போதைய எதிர்க் கட்சித் தலைவருமான முகமது நஷீத் (படம்), தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது ஆதாரத்துடன் நிரூபணமாகி உள்ளதால், அவருக்கு 13 வருட கடுங்காவல் தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது.
மாலத்தீவின் அதிபராக முகமது நஷீத் இருந்தபோது, அந்நாட்டின் குற்றவியல் நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா முகமதை கைது செய்ய உத்தரவிட்டார்.
இதைனைத் தொடர்ந்து அங்கு எதிர்க்கட்சியினர் வலுவான போராட்டத்தை நடத்தினர். இதில் நஷீத்தின் ஆட்சி கவிழ்ந்தது. அதன் பின்னர் நடைபெற்ற தேர்தலில் யாமீன் அப்துல் கயூம் வெற்றி பெற்று புதிய அதிபராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், முகமது நஷீதை தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் மாலத்தீவு காவல்துறையினர் கடந்த மாதம் கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணை இன்று இறுதிக்கட்டத்தை எட்டியது.
விசாரணையின் முடிவில், நீதிபதி அப்துல்லா முகமதை வலுக்கட்டாயமாக கடத்தி கிரிபுஷி தீவுகளில் தடுப்பு காவலில் வைத்தது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது போன்ற செயல்களில் நஷீத் ஈடுபட்டது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக தற்போதய நீதிபதி அப்துல்லா தீதி தெரிவித்தார்.
மேலும், அவர் நாட்டின் இறையான்மையை சீர் குலைக்கும் செயல்களில் நஷீத் ஈடுபட்டதாக கூறி அவருக்கு 13 வருடங்கள் கடுங்காவல் தண்டனை அளிப்பதாக தீர்ப்பளித்தார்.