லண்டன், மார்ச் 16 – இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் மனித மூளையில் வலியை உணரச் செய்யும் பகுதியை கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் நாம் வலியைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
மனித உணர்ச்சிகளில் மிகவும் சிக்கலானது வலி தான். காலின் ஏதோ ஒரு இடத்தில் முள் குத்தினாலும், உடனடியாக நாம் அறிந்து கொள்வதற்கு இந்த உணர்ச்சி தான் காரணம்.
உடலில் வலியில்லாத வாழ்க்கை சராசரி மனிதர்களுக்கு எப்படி இருக்கும் என்ற விவாதத்தை விட நோயாளிகளுக்கு அது பலனளிக்குமா என்பதைத் தான் ஆராய வேண்டும்.
இந்த ஆராய்ச்சியில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். மனித மூளையின் வலியை உணரச் செய்யும் பகுதியை கண்டறிந்துள்ள அவர்கள், இதன் மூலம் தாங்க முடியாத வலியால் சிரமப்படும் நோயாளிகளின் வலியை மறக்கடிக்க செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், தங்கள் வலியை வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ள கோமா நோயாளிகளுக்கு வலியை உணரச் செய்ய முடியும் என்றும் கூறியுள்ளனர். இந்த ஆராய்ச்சி பற்றி அதன் தலைமை விஞ்ஞானி ஐரின் டிரேஸி கூறுகையில்,
“வலி, மனித உணர்ச்சிகளில் மிகவும் சிக்கலானது. அது பற்றிய ஆராய்ச்சி எப்பொழுதும் கடினமானதாக இருக்கும். இது மனிதர்களின் மற்ற செயல்பாடுகளையும் பாதிக்கிறது”.
“குறிப்பாக கவனிப்பு திறன், பயம், உணர்ச்சி வசப்படுதல் போன்றவற்றில் வலி ஆதிக்கம் செலுத்துகிறது. எனவே இது பற்றிய தற்போதய கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது” என்று கூறியுள்ளார்.