Home நாடு சூடு பிடிக்கும் பாஸ் தலைவர் தேர்தல் – ஹூசாம் மூசாவும் களத்தில் குதிக்கலாம்!

சூடு பிடிக்கும் பாஸ் தலைவர் தேர்தல் – ஹூசாம் மூசாவும் களத்தில் குதிக்கலாம்!

653
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 16 – நடைபெறவிருக்கும் பாஸ் கட்சியின் தேர்தல்களில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகலாம் என்றும் இதனால், அக்கட்சியின் தேர்தல்கள், குறிப்பாக தேசியத் தலைவருக்கான தேர்தல் அனல் பறக்கும் பிரச்சாரமாக உருவெடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

hadi-awangபாஸ் கட்சித் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவது குறித்து நடப்புத் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜி அப்துல் ஹடி அவாங் (படம்) இன்னும் உறுதியாகத் தெரிவிக்கவில்லை. உடல்நலக் குறைவை எதிர்நோக்கியிருக்கும் அவர் இறுதி நேரத்தில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டாலும், யார் வேண்டுமானாலும் என்னை எதிர்த்துப் போட்டியிடலாம் என அவர் அறைகூவல் விடுத்திருக்கின்றார்.

இந்நிலையில், பாஸ் கட்சித் தலைவர் பதவிக்கு அப்துல் ஹடி அவாங்கை எதிர்த்துப் போட்டியிட கட்சியின் உதவித் தலைவர் டத்தோ ஹூசாம் மூசா பெயரை பாஸ் கட்சியின் கோத்தா திங்கி தொகுதி ஏகமனதாக முன்மொழிந்துள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அத்தொகுதியின் ஆண்டு பொதுக் குழு கூட்டம் நடைபெற்ற பின்னர் இது தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானது.

முன்னதாக ஹடி அவாங்கை எதிர்த்து பாஸ் கட்சியின் மற்றொரு உதவித் தலைவர் டத்தோ துவான் இப்ராகிம் துவான் மன் போட்டியிடுவார் என்றும் அவரது பெயரை கோத்தா பாரு பாஸ் தொகுதி முன்மொழிந்திருப்பதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் இத்தகவலை துவான் மன் உடனடியாக மறுத்தார்.

இந்நிலையில் தலைவர் பதவிக்கான போட்டிக்கு ஹூசாம் மூசா பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

இதற்கிடையே நடப்புத் தலைவர் ஹடி அவாங்கே கட்சித் தலைவராக நீடிக்க வேண்டும் என கிளந்தான் மந்திரி பெசார் டத்தோ அகமட் யாகோப் விருப்பம் தெரிவித்துள்ளார்.

நடப்பு துணைத் தலைவரான முகமட் சாபுவும் தேசியத் தலைவருக்கான போட்டியில் குதிக்கலாம் என ஆரூடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.