Home தொழில் நுட்பம் கடவுச்சொல்லை மறந்தாலும் இனி கவலையில்லை!

கடவுச்சொல்லை மறந்தாலும் இனி கவலையில்லை!

629
0
SHARE
Ad

passwordகோலாலம்பூர், மார்ச் 17 – அலிபாபா காலத்தில் இருந்தே இரகசியங்களை பாதுகாக்க ‘கடவுச் சொல்’ (Password) என்பது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது கடவுச் சொல்லை மறந்தால், தலை வெட்டப்படா விட்டாலும் அதனை மீட்ப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். பயனர்களின் இந்த பிரச்சனையை புரிந்து கொண்ட ‘யாஹூ’ ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.

இரண்டிற்கும் மேற்பட்ட இணைய கணக்குகளை வைத்திருப்பவர்கள் கடவுச் சொற்களை நினைவில் வைத்துக் கொள்வது கடினம். இதனை உணர்ந்துள்ள யாஹூ, ஒரு சரியான தீர்வை ‘சவுத் பை சவுத்வெஸ்ட்’ (south by southwest) தொழில்நுட்ப மாநாட்டில் அறிமுகம் செய்துள்ளது.

‘ஆன் டிமாண்ட்’ (On Demand) எனும் பெயரில் அறிமுகமாகி உள்ள கடவுச் சொல் பாதுகாப்பு வசதியில், பயனர்கள் முதல் ஒருமுறை வழக்கம் போல் கடவுச் சொல்லை பயன்படுத்த வேண்டும். அப்போது செட்டிங் அமைப்பில் இருக்கும் ஆன் டிமாண்ட் அம்சத்தை தேர்வு செய்து நம் செல்பேசி எண்ணையும் சமர்ப்பிக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

அதன்பிறகு, அடுத்ததாக எப்போதெல்லாம் யாஹு சேவைக்குள் நுழைய விரும்பினாலும் கடவுச்சொல் கட்டத்தில் ‘send my password’ பொத்தானை அழுத்தினால் போதுமானது. கடவுச்சொல் தானியங்கியாக நமது செல்பேசிக்கு வந்துவிடும். இதன் மூலம் கடவுச் சொல்லை மறந்துவிட்டு அதனை மீண்டும் மீட்க்கும் நடைமுறையை தவிர்க்கலாம்.

தற்போதய கடவுச்சொல் பாதுகாப்பு நடைமுறையில் ஜிமெயில் உள்ளிட்ட அனைத்து சேவைகளிலும் ‘இரு வழி அங்கீகார முறை’ (Two Way Authentication) பயன்படுத்தப்படுகிறது. அதாவது இந்த முறையில் செல்பேசி எண்ணை பதிவு செய்த பிறகு, கடவுச்சொல் மறந்து போகும் ஒவ்வொரு சமயத்திலும் செல்பேசிக்கு ஒரு குறியீடு அனுப்பபடும். அந்தக் குறியீட்டைப் பயன்படுத்தி நாம் வேறு கடவுச் சொல்லை உருவாக்க வேண்டும்.

கடவுச்சொல்லை இந்த முறையில் ஹேக் செய்வது மிகக் கடினம். ஏனெனில், செல்பேசி இருந்தால் மட்டுமே நாம் புதிய குறியீட்டைப் பெற முடியும். ஆனாலும் இது பயனருக்கு சற்றே சலிப்பை ஏற்படுத்துகிறது.  இந்நிலையில் யாஹூ அறிமுகப்படுத்தி உள்ள புதிய முறை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இது பற்றி  யாஹூ நிறுவன அதிகாரி டைலன் கேசி கூறுகையில், “பொதுவாக செல்பேசிகள் பயனர்களிடத்தில் இருக்கும் என்பதால் இது போன்ற முறைகள் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. மேலும் கடவுச் சொற்களை தேவையில்லாமல் மீண்டும் மீண்டும் உருவாக்க வேண்டியதில்லை” என்று கூறியுள்ளார்.

எனினும், இதன் நடைமுறை கடவுச் சொல் பாதுகாப்பதிலும், பயன்பாட்டிலும் எத்தகைய விளைவை ஏற்படுத்துகிறது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.