கோலாலம்பூர், மார்ச் 17 – நாடாளுமன்றத்தில் நீதித்துறை குறித்து அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு, நேற்று கைது செய்யப்பட்ட லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரும், பிகேஆர் உதவித் தலைவருமான நூருல் இசா அன்வார், இன்று வாக்குமூலம் அளித்த பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
டாங் வாங்கி காவல்நிலையத்தில் இருந்து இன்று மதியம் 12.15 மணியளவில் நூருல் இசா விடுவிக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் ஆர். சிவராசா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
“ 4 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யும் முடிவை காவல்துறை எடுக்கக்கூடாது என்று கூறி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரணம் விசாரணை செய்வதற்கு எங்கள் தரப்பு முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக உள்ளது” என்று சிவராசா தெரிவித்துள்ளார்.
மீண்டும் எதிர்வரும் ஏப்ரல் 16-ம் தேதி நூருல் இசா, காவல்நிலையத்திற்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் சிவராசா தெரிவித்துள்ளார்.