கர்நாடகா, மார்ச் 18 – ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா உட்பட 4 பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதி இன்று வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெங்களூரு தனிநீதிமன்றத்தில் நடந்த வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் கடந்த சனவரி 5-ஆம் தேதி தொடங்கி 41 நாட்கள் நடைபெற்றது.
தற்போது இருதரப்பு வாதமும் முடிந்த நிலையில், இவ்வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அனுமதிகேட்டு சுப்பிரமணியசாமி மனு கொடுத்திருந்தார்.
அதை பரிசீலனை செய்த நீதிபதி குமாரசாமி, உங்கள் தரப்பு வாதத்தை எழுத்து மூலமாக தாக்கல் செய்யலாம் என அனுமதி வழங்கியதால் தனது தரப்பு வாதத்தை எழுத்து மூலமாக நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்பு சுப்பிரமணியசாமி தாக்கல் செய்தார்.
இதையடுத்து நீதிபதி தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார். இதற்கிடையில், மேல்முறையீட்டு வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்கக் வேண்டும் என்று தி.மு.க.பொதுச்செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.
அன்பழகனின் இந்த மனு ஏற்கப்பட்டால், நீதிபதி குமாரசாமி முன்னிலையில் புதிய அரசு வழக்கறிஞர் தமது வாதத்தைப் பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு, ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணை மேலும் சில காலம் நீட்டிக்கப்படலாம்.
ஆனால் அதேவேளையில், அன்பழகனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டால் இன்றே மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்புக்கான தேதியை நீதிபதி குமாரசாமி அறிவிக்க வாய்ப்பிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.