ஜோகூர் பாரு, மார்ச் 18- தண்ணீர் சூடுபடுத்தும் இயந்திரத்தில் இருந்து வெளியான நச்சு வாயுவை சுவாசித்ததால் சீனாவில் உயிரிழந்த மலேசியாவைச் சேர்ந்த 5 வணிகர்களின் உடல்களை பெற்றுவர அவர்களது உறவினர்கள் 10 பேர் வரும் ஞாயிற்றுக்கிழமை அங்கு செல்ல உள்ளனர்.
ஜோகூர் பாரு சிறு வணிகர்கள் சங்கத்தின் தலைவரான சின் யோக் வெங் (60), சியா ஃபூ ஹெங் (48), தாய் சோங் சாய் (42), தான் பியான் சியாங் (41), நக் வெய் ஷன் (28) ஆகிய 5 பேரும் சீனாவின் நான்னிங் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கியிருந்த வேளையில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அப்போது அவர்களுடன் தங்கியிருந்த சியா ஃபூ ஹெங்கின் மனைவி லிம் சிங் லிங் (46) மட்டும் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்திலிருந்து உயிர் பிழைத்துள்ளார். அவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 15 ஆம் தேதி 5 பேரும் சீனா சென்றிருந்தனர். அங்கு வாடகைக்கு எடுத்த வீட்டில் இரவு அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தபோது, வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 5 பேரும் உறக்கத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஐவரும் ஜோகூர் பாருவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது மறைவுக்கு ஜோகூர் பாரு சிறு வணிகர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.