புதுடெல்லி, மார்ச் 18 – விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கும் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில்,
ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி, திரிணாமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட 14 கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் நாடாளுமன்றத்தில் இருந்து அதிபர் மாளிகையை நோக்கி நேற்று பேரணியாக சென்றனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிபர் பிரணாப்பை சந்தித்த 26 நாடாளுமன்ற குழுவினர், இந்த விவகாரத்தில் தலையிட்டு, மாநிலங்களவையில் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் (2013-ல்) கொண்டு வரப்பட்ட, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த ஆண்டு இறுதியில் அவசர சட்டத்தை கொண்டு வந்தது.
இதில், நிலம் கையகப்படுத்தும்போது, 70 சதவீத விவசாயிகளின் ஒப்புதலை பெற வேண்டும் என்பதில், குறிப்பிட்ட 5 திட்டங்களுக்கு விலக்கு அளிப்பது போன்ற, முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டன. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
நாடாளுமன்ற அவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, அதில் 52 திருத்தங்களை கொண்டு வரவேண்டும். அதன் பின்னரே அதனை நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்தன. இருப்பினும், அவற்றுள் 9 திருத்தங்களை மட்டுமே மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து, மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், அதிமுக ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மாநிலங்களவையில் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓர் அணியில் திரண்டுள்ளன.
இதனால், மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் பேரணி நடத்தியது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து அதிபர் மாளிகையை நோக்கி ஒரு கி.மீ. தூரத்துக்கு எதிர்க்கட்சியினர் நேற்று மாலை பேரணியாக சென்றனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த இந்த பேரணியை, ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் ஒருங்கிணைத்தார்.
காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி, திரிணாமூல் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக் தளம் உள்ளிட்ட 14 கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.