கோலாலம்பூர் மார்ச் 20 – வரலாறு காணாத அளவில் எப்.ஏ கிண்ணப்போட்டியில் நமது இந்திய சமுதாயத்தின் கனவு அணியாக விளங்கும் எம்.ஐ.எஸ்.சி – மிபா அணி முதன் முறையாக பங்கேற்கிறது.
எப்.ஏ.எம் கிண்ணப்போட்டிகளில் விளையாடும் அணிகளில் நமது அணி மட்டுமே முதல் அணியாக, 3 வது சுற்றில் முன்னாள் எப்.ஏ சாம்பியனான பகாங் அணியுடன் மோதவிருக்கிறது.இந்த வரலாற்று நிகழ்வை வெற்றியோடு நிலைநிறுத்த நமது அணி போராடும் என எம்.ஐ.எஸ்.சி – மிபா அணியின் நிர்வாகி ஜெ.தினகரன் (படம்) பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.
வருகின்ற 21.03.2015 சனிக்கிழமை இரவு 8.45 மணிக்கு நமது அணி பகாங் அணியை டாருல் மக்மூர் குவந்தான் திடலில் சந்திக்க விருக்கிறது. இந்த ஆட்டம் நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
“நாம் மோதவிருப்பது பலமான அணியுடன் என்ற போதிலும் நமது அணி வீரர்கள் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியையும் கைவிட்டு விடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். வெல்வோம் என்பதை விட வெற்றிக்காக கடுமையாக போராடுவோம் என்பதே அணி வீரர்களின் கருத்தாக இருக்கிறது.
அதனைத்தொடர்ந்து வழக்கம் போல் சுற்றுவட்டார இந்திய சமுதாயத்தினர் ஆட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து அணி வீரர்களுக்கு ஊக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என ஜெ.தினகரன் தெரிவித்துள்ளார்.