கோலாலம்பூர், மார்ச் 20 – எம்எச்370 காணாமல் போனதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே அதில் பயணம் செய்தவர்களின் உறவினர்களுக்கு அத்தகவல் தெரிவிக்கப்பட்டது என போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.
இது தொடர்பாக ஐசெக நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, போக்குவரத்து அமைச்சு அளித்துள்ள பதிலில், விமானம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான ஒரு மணி நேரத்திற்கு முன்பே பயணிகளின் குடும்பத்தாருக்கு தொலைபேசி, மின்னஞ்சல், குறுந்தகவல் வழி அத்தகவல் தெரிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 29ஆம் தேதி, விமான போக்குவரத்துத் துறையின் தலைமைச் செயலர் டத்தோ அசாருடின் அப்துல் ரஹ்மான், எம்எச்370 காணாமல் போய்விட்டது என்றும், இச்சம்பவம் ஒரு விபத்து என்றும், விமானத்தில் பயணம் செய்த அனைவரும் இறந்திருக்கலாம் என கருதப்படுவதாகவும் அறிவித்தார்.
இந்த அறிவிப்பின் மூலம் பயணிகளின் குடும்பத்தார் தங்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற வழி ஏற்பட்டது. எனினும் விமானத்தைத் தேடும் நடவடிக்கைகள் நீடித்து வருகின்றன.
விமானம் காணாமல் போனது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே தங்களுக்கு அத்தகவல் தெரிவிக்கப்பட்டது என பயணிகளின் உறவினர்கள் அதிருப்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.